இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நகரங்களில் ஒன்றான குர்கானில்  வசித்து வரும் கங்கனா ராய் (25) என்ற இளம் பெண், தனது மாதச் செலவுகளை வெறும் 27 ஆயிரம் ரூபாய்க்குள் எப்படிச் சமாளிக்கிறார் என்பது குறித்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். மெட்ரோ நகரங்களில் வாழ்க்கைச் செலவுகள் விண்ணைத் தொடும் இந்த காலகட்டத்தில், அவர் வெளியிட்டுள்ள பட்ஜெட் பட்டியல் இணையவாசிகளின் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. தனது செலவுகள் குறித்துப் பேசிய கங்கனா, “நான் தங்கியிருக்கும் 1RK (ஒரு அறை மற்றும் சமையலறை) வீட்டிற்கு மாத வாடகையாக ₹13,000 செலுத்துகிறேன்.

குர்கானில் வெயில் அதிகம் என்பதால் மின்சாரக் கட்டணம் மாதம் ₹1,000 முதல் ₹1,300 வரை வருகிறது. வேலை மற்றும் கோச்சிங் வகுப்புகளுக்குச் செல்ல பைக் டாக்ஸிகளைப் பயன்படுத்துவதால், பயணச் செலவு மட்டும் மாதத்திற்கு ₹3,500 ஆகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

உணவுச் செலவுகளைப் பொறுத்தவரை, மதிய மற்றும் இரவு உணவிற்காக டிஃபன் சர்வீஸ்மூலம் மாதம் ₹3,300 செலுத்துகிறார். இதுதவிர, காலை உணவிற்கான பால், மியூஸ்லி (Muesli) மற்றும் தினசரி காபி தேவைகளுக்காக மாதம் ₹2,200 செலவிடுகிறார். இணையம் (Internet) மற்றும் நெட்ஃபிலிக்ஸ், யூடியூப் போன்ற பொழுதுபோக்கு சந்தாக்களுக்கு ₹1,400-ம், இதர வெளி உணவுகள், மளிகைப் பொருட்கள் மற்றும் சுயசுத்தம் சார்ந்த பொருட்களுக்கு ₹3,000-ம் செலவழிக்கிறார்.

இந்த செலவுகள் போக மீதமுள்ள தொகையைத் தனது சேமிப்பிற்கும், இஎம்ஐ (EMI) கட்டணங்களுக்கும் பயன்படுத்துவதாகக் கூறும் கங்கனா, தற்போதைய வருமானத்தில் இவை இரண்டையும் ஒரே நேரத்தில் சமாளிப்பது கடினமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். குர்கான் போன்ற காஸ்ட்லியான நகரத்தில் இவ்வளவு கச்சிதமாகப் பட்ஜெட் போட்டு வாழும் இவரைப் பாராட்டி, பலரும் தங்களது பட்ஜெட்டோடு ஒப்பிட்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.