தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் ஜுபிளி ஹில்ஸ் பகுதியில் பத்திரிகையாளர்கள் காலனியில் துணை காவல் ஆணையாளர் ராகுல் ஹெக்டே என்பவர் வசித்து வருகிறார். இக்கட்டிடத்தில் நடிகை டிம்பிள் ஹயாதி மற்றும் அவரது நண்பர் டேவிட் போன்றோர் வசித்து வருகின்றனர். இதில் ராகுலின் அரசு கார் அவரது இல்லத்திற்கு வெளியில் நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் அக்காரின் மீது நடிகை டிம்பிள் மற்றும் அவரது நண்பர் இருவரும் காரை கொண்டு மோதியுள்ளனர். இதனால் ராகுலின் கார் சேதமடைந்துள்ளது. இதுகுறித்து துணை காவல் ஆணையாளரின் கார் ஓட்டுநர், ஜுபிளி ஹில்ஸ் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். உள்நோக்கத்துடன் இச்சம்பவம் நடந்துள்ளது என்று புகாரில் அவர் குற்றச்சாட்டாக தெரிவித்துள்ளார். இதனிடையே காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டதில் காரை கொண்டு டிம்பிளும், அவரது நண்பரும் மோதியது தெரியவந்துள்ளது.

அதன்படி நடிகை டிம்பிளுக்கு எதிராக குற்றவழக்கு பதிவாகியுள்ளது. இருப்பினும் காவல் உயரதிகாரி தனக்கு உள்ள அதிகாரங்களை தவறாக பயன்படுத்துகிறார் என டிம்பிள் தன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அதோடு சத்தியமே வெல்லும் என்று அவர் பதிவிட்டுள்ளார். கடந்த 2019ம் வருடம் கல்ப் என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரைத்துறையில் நடிகை டிம்பிள் ஹயாதி நுழைந்துள்ளார். அதனை தொடர்ந்து கில்லாடி மற்றும் ராமபாணம் படங்களில் நடித்துள்ளார். தமிழில் வீரமே வாகை சூடும் எனும் படத்தில் நடிகர் விஷாலுடன் ஜோடியாக நடித்துள்ளார்.