தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து மாவட்ட காவல்துறையினருக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த 2022-ஆம் ஆண்டு தமிழக காவல்துறையின் சிறந்த செயல்பாடுகளால் பெரிய அளவில் குற்றங்களோ அசம்பாவித சம்பவங்களோ நடைபெறவில்லை. ஜாதி அல்லது வகுப்புவாத மோதல், காவல்துறையினரின் துப்பாக்கிச் சூடு போன்ற பெரிய பிரச்சனைகள் எதுவும் நடைபெறவில்லை. அதன்பிறகு மாமல்லபுரத்தில் நடைபெற்ற செஸ் போட்டி, ஜல்லிக்கட்டு, திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா, விநாயகர் சதுர்த்தி, மதுரை சித்திரைத் திருவிழா, இம்மானுவேல் சேகரன் நினைவு நாள், தேவர் குருபூஜை மற்றும் ஜல்லிக்கட்டு போன்றவைகள் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் சுமுகமான முறையில் நடந்து முடிந்தது.

அதன் பிறகு ஆப்ரேஷன் ரவுடி வேட்டையில் 3,949 ரவுடிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதேபோன்று ஆப்ரேஷன் கஞ்சா வேட்டையில் 9,906 வழக்குகள் பதியப்பட்டு, 13,491 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டதோடு 24 டன் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 4,141 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது. முதல்வர் திட்டத்தின் கீழ் 1500 காவலர்களின் குறைகள் தீர்க்கப்பட்டதோடு, பணியின் போது உயிரிழந்த 1132 காவலர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த சாதனைகள் அனைத்தும் தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆண், பெண் காவலர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடமையால் தான் சாத்தியமானது. இந்நிலையில் காவல்துறையின் பணிகளில் வரும் காலங்களை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். நம்முடைய பாரம்பரியம் மற்றும் காவல் பணியில் தொழில் சார்ந்த உயர்ந்த தரத்தை பாதுகாக்க நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.