சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் மறைந்த முலாயம் சிங் யாதவின் இளைய மகன் பிரதீக் யாதவ் (38), இன்று காலை லக்னோவில் திடீரென காலமானார்.
புதன்கிழமை அதிகாலை 6.15 மணியளவில் அவரது குடும்பத்தினர் அவரை லக்னோ அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவின் ஒன்றுவிட்ட சகோதரரான பிரதீக், பாஜக தலைவரான அபர்ணா யாதவின் கணவர் ஆவார். உடற்பயிற்சி ஆர்வலராகவும், ரியல் எஸ்டேட் அதிபராகவும் அறியப்பட்ட இவருக்கு உடலில் காயங்கள் எதுவும் இல்லாத நிலையில், மரணத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழக மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனை செய்ய உள்ளனர்.
இங்கிலாந்தில் பட்டம் பெற்று, விலங்கு நல ஆர்வலராகவும் வலம் வந்த பிரதீக் யாதவின் மறைவு யாதவ் குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, கடந்த ஜனவரி மாதம் தனது மனைவி அபர்ணாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்யப்போவதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த பிரதீக், பின்னர் அந்த முடிவைக் கைவிட்டிருந்தார்.
லக்னோவின் முதல் நவீன உடற்பயிற்சிக் கூடத்தைத் தொடங்கி, உடல் மாற்றத்திற்காகப் புகழ்பெற்ற ஒரு இளைஞர், இவ்வளவு சீக்கிரம் உயிரிழந்தது அரசியல் மற்றும் தொழில் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த சமயத்தில் அவரது மனைவி உடன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
