ஆந்திர மாநிலம் ஜனசேனா கட்சி எம்.எல்.ஏ. அரவ ஸ்ரீதர் மீது எழுந்துள்ள பாலியல் புகாரைக் கண்டித்து, முன்னாள் அமைச்சரும் நடிகையுமான ரோஜா தலைமையில் நகரியில் பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய ரோஜா, ஆளும் கூட்டணி அரசை மிகக்கடுமையாகச் சாடினார். அவர் பேசியதாவது: “ஜனசேனை கட்சி என்பது தற்போது காமக்கொடூரன்களின் சேனையாக மாறிவிட்டது. ஒழுக்கமில்லாதவர்கள் அரசியலுக்கு வந்துள்ள இந்த ஆட்சியில், பொதுமக்களுக்கு எவ்வித மரியாதையும் கிடைக்காது. குறிப்பாக, பெண்களுக்கு அநியாயம் நடந்தால் இங்கு நீதி கிடைப்பதில்லை. ரெயில்வே கோடூரில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உடனடியாக நீதி வழங்கப்பட வேண்டும்.

குற்றம் சாட்டப்பட்ட எம்.எல்.ஏ. மீது இதுவரை வழக்குப் பதிவு செய்யாத உள்துறை அமைச்சர் அனிதாவைப் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்ய வேண்டும். அதேபோல், தனது கட்சி எம்.எல்.ஏ-வின் அராஜகத்திற்குப் பொறுப்பேற்றுத் துணை முதல்வர் பவன் கல்யாண் பதவி விலக வேண்டும். பாதிக்கப்பட்ட பெண் அனைத்து ஆடியோ, வீடியோ ஆதாரங்களையும் சமர்ப்பித்த பிறகும், விசாரணைக்காகக் குழு அமைப்போம் என்று ஜனசேனா கட்சி அறிவித்திருப்பது வெட்கக்கேடானது.

தேர்தலுக்கு முன்பாக, ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் 30 ஆயிரம் பெண்கள் கடத்தப்பட்டதாகவும், அவர்களை மீட்போம் என்றும் பவன் கல்யாண் முழங்கினார். ஆனால், இதுவரை ஒரு பெண்ணையாவது அவர் மீட்டாரா? தற்போது அவரது கட்சி எம்.எல்.ஏ-க்களே பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கிடைக்கும் வரை எங்களது போராட்டம் ஓயாது” என்று ரோஜா ஆவேசமாகத் தெரிவித்தார்.