உத்தரப் பிரதேசத்தின் புலந்த்சாஹர் கோத்வாலி பகுதியில் சக்சர் (Sakshar) என்ற இளைஞர் மர்மமான முறையில் காணாமல் போனார். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சக்சர், தீபக் மற்றும் தேவேஷ் ஆகிய நண்பர்கள் மூவரும் அவந்திகா என்ற திருநங்கையை காதலித்து வந்துள்ளனர். இதில் சக்சரின் தொந்தரவு பிடிக்காததால், அவந்திகா தனது மற்றொரு காதலனான தீபக்குடன் சேர்ந்து சக்சரைத் தீர்த்துக்கட்டத் திட்டம் தீட்டியுள்ளார்.
சம்பவத்தன்று சிக்கந்தராபாத் பகுதியில் உள்ள ஒரு மாந்தோப்பில் மது விருந்துக்கு வருமாறு சக்சரை அவரது நண்பர்கள் அழைத்துள்ளனர். அங்கு மது போதையில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், கற்கள் மற்றும் கட்டைகளால் சக்சரை அடித்துக் கொலை செய்துள்ளனர்.
அடையாளம் தெரியாமல் இருக்க, சடலத்தை அங்கேயே குழி தோண்டிப் புதைத்துள்ளனர். போலீஸார் நடத்திய தேடுதல் வேட்டையில் சக்சரின் ஆதார் கார்டு மற்றும் ரத்தக் கறை படிந்த கற்கள் கைப்பற்றப்பட்டன.
இந்த வழக்கில் திருநங்கை அவந்திகா உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முக்கியக் குற்றவாளியான தீபக் தலைமறைவாக உள்ளார். அவரைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
