சமூக வலைதளங்களின் வளர்ச்சியும், அதன் பின்னணியில் நடக்கும் மிரட்டல்களும் ஒரு பெண்ணின் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையை சீரழிக்கும் நிலைக்குத் தள்ளியுள்ளது. ஹரியானா மாநிலம் சோனிபட் நகரில், முன்னாள் காதலன் ஒருவன் ஆபாச வீடியோவை காட்டி பெண்ணை மிரட்டி வந்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது  பெண் ஒருவர், தனது முன்னாள் காதலன் ஆசிஷ் மற்றும் அவரது நண்பர்களுக்கு எதிராக காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில் அவர் கூறியிருப்பதாவது,

திருமணத்திற்கு முன்பு ஆசிஷ் என்பவருடன் அந்தப் பெண்ணுக்குப் பழக்கம் இருந்துள்ளது. திருமணத்திற்குப் பிறகு அந்தப் பெண் புதிய வாழ்க்கையைத் தொடங்கிய நிலையில், ஆசிஷ் அவரிடம் இருந்த பழைய ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோக்களைக் காட்டி மிரட்டத் தொடங்கியுள்ளார். வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி, கடந்த பல ஆண்டுகளாக அந்தப் பெண்ணை ஆசிஷ் கட்டாயப்படுத்தி வந்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்ட ஆசிஷ், அந்தப் பெண்ணை தனது கணவரைப் பிரிந்து வருமாறும், தன்னுடன் சேர்ந்து சமூக வலைதளங்களுக்காக (Reels) வீடியோக்கள் செய்யுமாறும் வற்புறுத்தியுள்ளார். தனது குடும்ப மானத்தைக் காக்க அந்தப் பெண் நீண்ட நாட்களாக இந்தக் கொடுமைகளை மௌனமாக சகித்துக் கொண்டுள்ளார்.

இருப்பினும், ஆசிஷின் அத்துமீறல் அதிகரித்து, அந்தப் பெண்ணின் கணவர் முன்னிலையிலேயே தவறாக நடக்க முயன்றுள்ளார். இதன் விளைவாக, தற்போது அந்தப் பெண்ணின் கணவர் அவருடனான உறவைத் துண்டிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். இதனால் அந்தப் பெண்ணின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.

இது குறித்து கிலா காவல் நிலைய ஆய்வாளர் சுரேஷ் கூறுகையில், பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குற்றம் சாட்டப்பட்ட நபர் மீதான புகார்கள் குறித்து ஆதாரங்கள் சேகரிக்கப்படுகின்றன. தற்போது முதற்கட்ட விசாரணை நடைபெற்று வருவதால், விரைவில் முறையான வழக்கு பதிவு செய்யப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.