பெங்களூருவில் வியாபார நஷ்டத்தைப் போக்க பரிகார பூஜை செய்த போது, இளம்பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த போலிச் சாமியாரைக் காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
சென்னமரே அச்சுக்கட்டு பகுதியில் வசித்து வரும் ஒரு தம்பதியினர், கடந்த சில நாட்களாகத் தொழில் ரீதியான நெருக்கடியைச் சந்தித்து வந்துள்ளனர். கணவர் நடத்தி வரும் கடையில் போதிய லாபம் கிடைக்காததால், அக்குடும்பம் கடும் பொருளாதாரச் சிக்கலில் தவித்து வந்தது.
இதனைத் தீர்ப்பதற்காக அவர்கள் மோகன்குமார் என்ற சாமியாரை அணுகியுள்ளனர். அப்போது அந்தச் சாமியார், “உங்கள் குடும்பத்தில் கடும் கண் திருஷ்டி உள்ளது, அதனால்தான் வியாபாரத்தில் முடக்கம் ஏற்பட்டுள்ளது” எனக் கூறிப் பயமுறுத்தியுள்ளார். இதற்குத் தீர்வாக வீட்டில் ‘வசிய பூஜை’ செய்ய வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
குடும்பக் கஷ்டங்கள் தீரும் என நம்பிய அந்தத் தம்பதியினர், சாமியார் சொன்ன பூஜையைத் தங்கள் வீட்டிலேயே நடத்த ஏற்பாடு செய்தனர். சம்பவத்தன்று வீட்டிற்கு வந்த சாமியார் மோகன்குமார், “இந்தப் பூஜையின் போது மனைவி மட்டும் உள்ளே இருந்தால் போதும், கணவர் வெளியே இருக்க வேண்டும்” எனக் கூறி, அவரது கணவரை சுமார் 2 மணி நேரம் வீட்டை விட்டு வெளியே அனுப்பி வைத்துள்ளார்.
வீட்டில் யாரும் இல்லாத சமயத்தைப் பயன்படுத்திக் கொண்ட சாமியார், பூஜை செய்வது போல நடித்து அந்தப் பெண்ணைக் கட்டாயப்படுத்திப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், “இதுகுறித்து வெளியே சொன்னால், மாந்திரீக பூஜைகள் மூலம் உங்கள் குடும்பத்தையே அழித்துவிடுவேன்” என மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
மிரட்டலுக்குப் பயந்து சில நாட்கள் மௌனமாக இருந்த அந்தப் பெண்ணை, மீண்டும் தொடர்பு கொண்ட சாமியார் தனது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்துத் தனது கணவரிடம் தெரிவித்தார்.
இதனைத் கேட்டு அதிர்ச்சியடைந்த கணவர், உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீஸ் வருவதை அறிந்த போலிச் சாமியார் மோகன்குமார் தலைமறைவாகிவிட்டார். அவரைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுத் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
