திருமணம் என்ற புனிதமான பந்தம், சிலரின் சுயநலத்தாலும் தவறான ஆசைகளாலும் எவ்வளவு கொடூரமான குற்றமாக மாறுகிறது என்பதற்கு சாட்சியாக மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு நெஞ்சை உலுக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது.
மால்தா மாவட்டம் இங்கிலீஷ் பஜார் காவல் எல்லைக்குட்பட்ட சதாரி பகுதியில் வாழ்ந்து வந்த மொசம்மல் என்ற புலம்பெயர் தொழிலாளி, எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஷீலா பீபி என்ற பெண்ணை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளான்.
இரண்டு சிறு குழந்தைகளுக்குத் தாயான ஷீலா பீபி, தன் கணவனுடன் நிம்மதியாக வாழ நினைத்த நிலையில், மொசம்மலுக்குத் தனது சொந்த உறவுமுறையிலான அண்ணி மீது தவறான ஆசை ஏற்பட்டதுதான் இந்தத் துயரத்தின் தொடக்கமாக அமைந்தது.
கடந்த சில மாதங்களாகத் தன் அண்ணியுடன் மொசம்மல் தொடர்ந்து கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளான். இந்தத் தகவலை அறிந்த மனைவி ஷீலா பீபி, கணவனின் தவறான நடத்தைக் கடுமையாகக் கண்டித்து வீட்டின் அமைதியைக் காப்பாற்றப் போராடியுள்ளார்.
ஆனால், அண்ணியின் மீதான மோகத்தில் மூழ்கியிருந்த மொசம்மலுக்கு மனைவியின் எதிர்ப்பை பொறுத்துக் கொள்ள முடியாமல், அவரைத் தன் வழியிலிருந்து நிரந்தரமாக அகற்றத் திட்டமிட்டுள்ளான். சம்பவத்தன்று இதுதொடர்பாக இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த மொசம்மல் கூர்மையான ஆயுதத்தை எடுத்து மனைவியின் கழுத்தை அறுத்து மிகக் கொடூரமாகக் கொலை செய்துள்ளான்.
மேலும் கொலை செய்த பிறகும் சிறிதும் இரக்கமில்லாமல், கொடூரச் செயலை மறைப்பதற்காக மனைவியின் சடலத்தைக் படுக்கையறை கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்துவிட்டு ஏதும் அறியாதது போலத் தப்பியோட முயன்றுள்ளான்.
ஆனால், வீட்டில் ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான சூழலால் உள்ளே சென்று பார்த்த அண்டை வீட்டார், கட்டிலுக்கு அடியில் ரத்த வெள்ளத்தில் கிடந்த ஷீலாவின் சடலத்தைக் கண்டு உறைந்து போய் உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர்.
விரைந்து வந்த இங்கிலீஷ் பஜார் காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், கொடூரக் குற்றத்தில் ஈடுபட்ட கணவன் மொசம்மலையும் அவனுக்குத் துணையாக இருந்த அவனது கள்ளக்காதலியையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
