இன்றைய நவீன டிஜிட்டல் யுகத்தில் ஸ்மார்ட்போன் என்பது வெறும் தொடர்புகொள்வதற்கான சாதனம் மட்டுமல்லாமல், நம்முடைய தனிப்பட்ட தகவல்கள், வங்கி விவரங்கள் மற்றும் நினைவுகளைச் சேமித்து வைக்கும் ஒரு முக்கிய அங்கமாகவே மாறிவிட்டது.

இத்தகைய சூழலில், கைபேசி தொலைந்துபோவது அல்லது திருடப்படுவது என்பது எவருக்கும் பெரும் மன உளைச்சலையும் பொருளாதார இழப்பையும் தரக்கூடிய ஒன்றாகும். இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, இந்தியாவில் சஞ்சார் சாதி போர்ட்டல் மூலம் இதுவரை சுமார் 3.67 லட்சத்திற்கும் அதிகமான தொலைந்த மற்றும் திருடப்பட்ட மொபைல் போன்கள் வெற்றிகரமாகக் கண்டறியப்பட்டுள்ளன.

இருப்பினும், இதில் மூன்றில் ஒரு பங்கு மொபைல்கள் மட்டுமே மீண்டும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்பது சற்று சிந்திக்க வைக்கும் செய்தியாகும். தொலைந்த போன்கள் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், அவை உரிமையாளர்களின் கைக்கு வந்து சேருவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் தாமதங்கள் குறித்துப் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

காவல் துறையினரின் தொடர் நடவடிக்கைகள் மற்றும் சி.இ.ஐ.ஆர் தொழில் நுட்பத்தின் மூலம் போன் இருக்கும் இடத்தை எளிதாக அடையாளம் காண முடிந்தது. ஆனால், சட்டப்பூர்வமான ஆவணப் சரிபார்ப்புகள் மற்றும் பிற மாநில எல்லைப் பிரச்சனைகள் காரணமாக மீட்பு விகிதம் குறைவாக உள்ளது.

இதனால் போனைத் தொலைத்த பெரும்பாலான மக்கள், அது மீண்டும் கிடைக்குமா என்ற சந்தேகத்துடனேயே காத்துக் கிடக்கும் நிலை உருவாகியுள்ளது. ஒருவேளை உங்கள் ஸ்மார்ட்போன் தொலைந்துவிட்டால் அல்லது திருடப்பட்டால் பதற்றமடையாமல் சில முக்கிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.

முதற்கட்டமாக, உங்களின் தொலைபேசி சேவை நிறுவனத்தைத் தொடர்புகொண்டு சிம் கார்டை உடனடியாக முடக்க வேண்டும். அதைத் தொடர்ந்து, அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து அதன் சான்றிதழைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

பின்னர், மத்திய அரசின் ‘சஞ்சார் சாதி’ இணையதளத்திற்குச் சென்று, அதில் உள்ள CEIR சேவை வழியே உங்கள் போனின் IMEI எண்ணை உள்ளீடு செய்து போனை நாடு முழுமைக்கும் பயன்படாதவாறு முற்றிலும் பிளாக் செய்ய முடியும். இப்படிச் செய்வதன் மூலம் உங்கள் போனை யாராவது தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதுடன், போன் மீட்கப்படுவதற்கான வாய்ப்பையும் அதிகரிக்க முடியும்.