மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு அமைக்கப்படும் மிகவும் பிரபலமான விநாயகர் சிலைக்கு, இந்த ஆண்டு ரூ. 703.27 கோடிக்கு பிரம்மாண்டமான முறையில் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. வட மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படும் சூழலில், மும்பை கிங்ஸ் சர்க்கிள் பகுதியில் உள்ள ஜிஎஸ்பி சேவா மண்டல் இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளது.
ஜிஎஸ்பி சேவா மண்டல் அமைப்பின் 72-வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இங்கு அமைக்கப்படும் விநாயகர் சிலைக்கு சுமார் 335 கிலோ வெள்ளி, தங்கம் மற்றும் விலையுயர்ந்த நவரத்தினக் கற்களால் ஆன அபூர்வ ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் ஐந்து நாட்களுக்கு நடத்தப்பட உள்ளன.
கடந்த ஆண்டில் இந்த விநாயகர் சிலைக்கு ரூ. 474 கோடிக்கு காப்பீடு எடுக்கப்பட்டிருந்தது. ஆனால், நடப்பு ஆண்டில் தங்கம் மற்றும் வெள்ளியின் சந்தை விலை பெருமளவு உயர்ந்துள்ளதால், இந்த ஆண்டிற்கான காப்பீட்டுத் தொகையின் மதிப்பும் ரூ. 703.27 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக விழாக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்தக் காப்பீட்டுத் தொகையானது விநாயகர் சிலை மற்றும் அதன் ஆபரணங்களுக்கு மட்டுமின்றி, விழாவில் பங்கேற்கும் பக்தர்கள், அர்ச்சகர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களின் தனிநபர் விபத்துக் காப்பீட்டையும் உள்ளடக்கியது. விழாவுக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களின் பாதுகாப்பை முதன்மையாகக் கருதியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டிலேயே மிகச் பணக்கார விநாயகராகக் கருதப்படும் இந்த சிலைக்கும், அதைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கும் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தவிர்க்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற பிரம்மாண்ட காப்பீட்டு பாலிசிகள் எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
