காஞ்சிபுரம் மாவட்டம் வள்ளல் பச்சையப்பன் தெருவில் தனியார் நிதி நிறுவனம் அமைந்துள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு புத்தேரி பகுதியைச் சேர்ந்த குணா60) என்பவர் வீடு கட்டுவதற்காக நிதி நிறுவனத்தில் 23 லட்ச ரூபாய் பணம் கேட்டு விண்ணப்பித்துள்ளார். இதனால் தனியார் நிதி நிறுவனத்தினர் பல்வேறு ஆவணங்களை சரிபார்த்த பிறகு 12 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்தனர்.
அந்த பணத்திற்கான தவணை தொகையை குணா சரியாக செலுத்தவில்லை. நிதி நிறுவனத்தில் வேலை பார்க்கும் குணநிதி(36) என்பவர் பணத்தை வசூல் செய்ய அடிக்கடி குணாவின் வீட்டிற்கு சென்றதாக தெரிகிறது. இருப்பினும் அவர் சரியாக பணம் செலுத்தாததால் குணநிதி உட்பட பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் குணாவின் வீட்டிற்கு சென்று பெண்களிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த குணா நேற்று நிதி நிறுவனத்திற்கு சென்று குண நிதியிடம் சண்டை போட்டு மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாக வெட்டினார். இதனால் ரத்த வெள்ளத்தில் துடித்த குணநிதியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் குணாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
