சமூக வலைதளங்களில் நாம் பார்க்கும் செய்திகள் பல நேரங்களில் ஒரு நாணயத்தின் ஒரு பக்கத்தை மட்டுமே காட்டுகின்றன என்பதை நிரூபிக்கும் வகையில், கேரளாவில் விபத்தில் சிக்கிய வெளிநாட்டு பயணி ஒருவர் பதிவிட்ட நெகிழ்ச்சியான அனுபவம் தற்போது வைரலாகி வருகிறது. கேரளாவிற்கு சுற்றுலா வந்த அந்த வெளிநாட்டுப் பயணி, எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி காயமடைந்தபோது, அங்கிருந்த உள்ளூர் மக்கள் சாதி, மதம் மற்றும் மொழி வேறுபாடுகளைக் கடந்து அவருக்கு உடனடியாக உதவினர்.

மேலும் பொதுவாக இணையதளங்களில் இந்தியா அல்லது குறிப்பிட்ட மாநிலங்களைப் பற்றி நிலவும் எதிர்மறையான கருத்துகளுக்கு மத்தியில், கேரள மக்களின் இந்த மனிதநேயம் மற்றும் விருந்தோம்பல் பண்பு தனக்கு பெரும் வியப்பை அளித்ததாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து அவர் கூறுகையில், தான் காயமடைந்த தருணத்தில் அந்த இடத்திலிருந்த மக்கள் காட்டிய அன்பும் அக்கறையும் ஈடு இணையற்றது என்றும், ஆன்லைனில் நாம் வாசிக்கும் செய்திகளுக்கும் எதார்த்தத்திற்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதை தான் உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால் அடிபட்ட தனக்கு முதலுதவி சிகிச்சை அளித்தது முதல், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது வரை அங்கிருந்தவர்கள் காட்டிய வேகம் மற்றும் கனிவு, கேரளா ஏன் ‘கடவுளின் தேசம்’ என்று அழைக்கப்படுகிறது என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளதாக அவர் புகழாரம் சூட்டியுள்ளார். அந்நிய நாட்டு பயணி ஒருவர் கேரள மக்களின் பெருந்தன்மையை பாராட்டியுள்ள இந்தச் செய்தி இணையத்தில் பலரது மனங்களையும் வென்று வருகிறது.