மனிதாபிமானம் இன்னும் சாகவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு நெகிழ்ச்சியான வீடியோ இணையதளங்களை ஆக்கிரமித்து வருகிறது. கோவில் ஒன்றின் வாசலில் அமர்ந்திருந்த கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு, அந்த வழியாக வந்த ஒரு இளம்பெண் மாவுப் பாக்கெட் ஒன்றை உதவியாகக் கொடுக்க முன்வந்துள்ளார்.

ஆனால், அந்தப் பெண்ணோ தனக்கு உணவு வேண்டாம் என்றும், மருத்துவப் பரிசோதனைக்காகப் (Ultrasound Scan) பணம் மட்டுமே வேண்டும் என்றும் அழுதுகொண்டே கேட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Suchi Sharma (@suchisharmaaa)

கணவர் உடன் இல்லாத நிலையில், 8 மாத கர்ப்பிணியாக இருக்கும் அந்தப் பெண், வறுமை காரணமாக ஒருமுறை கூட ஸ்கேன் செய்து குழந்தையைப் பார்த்ததில்லை என்ற கசப்பான உண்மையைக் கேட்டு அந்த இளம்பெண் அதிர்ந்து போனார்.

உடனே அந்தப் பெண்ணைத் தனது காரில் அழைத்துச் சென்ற அந்த இளம்பெண், பல தனியார் மருத்துவமனைகளில் அலைந்து திரிந்து, இறுதியாக ஒரு அரசு மருத்துவமனையில் அந்தப் பெண்ணுக்கு ஸ்கேன் செய்து கொடுத்துள்ளார்.

வயிற்றில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதை அறிந்ததும் அந்த கர்ப்பிணிப் பெண்ணின் முகத்தில் மின்னிய புன்னகை காண்போரை உருக வைத்துள்ளது.

அத்துடன் நிற்காமல், அந்தப் பெண்ணின் குடிசைக்குச் சென்று ஒரு ஏர்-கூலர் மற்றும் ஒரு மாதத்திற்குத் தேவையான ரேஷன் பொருட்களை வாங்கிக் கொடுத்த அந்த இளம்பெண், “இனிமேல் நீ என் பொறுப்பு” எனக் கூறித் தழுவிக்கொண்டது பார்ப்பவர் கண்களில் கண்ணீரை வரவழைத்துள்ளது. சுமார் 1 கோடிக்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்ட இந்த வீடியோ, அன்பே கடவுள் என்பதை மீண்டும் ஒருமுறை உலகிற்கு உரக்கச் சொல்லியுள்ளது.