தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்குள் ‘ஆட்சி அதிகாரத்தில் பங்கு’ என்ற முழக்கம் தீவிரமடைந்துள்ளது. இது தொடர்பாகக் காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தரவுப் பகுப்பாய்வு அணித் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி அளித்துள்ள பேட்டி, அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆங்கிலச் செய்தி ஊடகம் ஒன்றிற்குப் பேட்டியளித்துள்ள பிரவீன் சக்கரவர்த்தி, தமிழக காங்கிரஸில் நிலவும் மனநிலையை வெளிப்படுத்தியுள்ளார். அவர் கூறுகையில், “தமிழகத்தில் உள்ள 75 சதவீத காங்கிரஸ் தொண்டர்கள் ஆட்சி அதிகாரத்தில் காங்கிரஸ் கட்சி பங்கு வகிக்க வேண்டும் என்றே விரும்புகிறார்கள். மஹாராஷ்ட்ரா, பிகார், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியால் அதிகாரப் பகிர்வு பெற முடியும்போது, தமிழ்நாட்டில் மட்டும் ஏன் முடியாது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலர் தங்களது மொத்த அரசியல் வாழ்வையே திமுக-வுக்காக அர்ப்பணித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், கடந்த கால நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டினார். “முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் திமுக இடம்பெற்றுப் பலன்களைப் பெற்றது. அதேபோல, தமிழகத்திலும் காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தில் பங்காற்றினால் மட்டுமே கட்சி வளரும்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், “காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதத்தை நீக்கிவிட்டால், திமுக-வால் மட்டும் ஆட்சிக்கு வர முடியுமா?” என்ற காரசாரமான கேள்வியையும் அவர் முன்வைத்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யைச் சந்தித்தது குறித்துப் பேசிய அவர், அது அரசியல் சந்திப்பு அல்ல என்று மறுத்தாலும், ஒரு முக்கிய நிபந்தனையை முன்வைத்துள்ளார். “காங்கிரஸ் கட்சியின் அதிகாரப் பகிர்வு மற்றும் அதிக இடங்கள் என்ற நிபந்தனைகளை ஏற்கும் எந்தக் கட்சியும் எங்களுக்கு இயல்பான கூட்டணிக் கட்சிதான்” என்று அவர் கூறியுள்ளார். இது மறைமுகமாக விஜய்யின் தவெக-வுக்கு விடுக்கப்பட்ட அழைப்பாகவே அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது.
தமிழக காங்கிரஸ் தலைமை, தாங்கள் திமுக கூட்டணியிலேயே தொடர்வதாகத் திட்டவட்டமாகத் தெரிவித்து வரும் நிலையில், ராகுல் காந்திக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் பிரவீன் சக்கரவர்த்தியின் இந்த அதிரடிப் பேச்சு, திமுக தலைமைக்குத் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக-வுக்கு எதிராக உறுதியாகச் செயல்படும் கட்சி காங்கிரஸ் மட்டுமே என்ற நம்பிக்கை மக்களிடம் இருப்பதால், காங்கிரஸ் எந்தக் கூட்டணியில் இருந்தாலும் மக்கள் வாக்களிப்பார்கள் என்றும் அவர் தன்னம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
