தமிழக அரசியலில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணிக் கணக்குகள் எதிர்பாராத திருப்பங்களைச் சந்தித்து வருகின்றன. குறிப்பாக, திமுக கூட்டணியில் நீடித்து வரும் காங்கிரஸ் கட்சி, தொகுதிப் பங்கீட்டில் திருப்தியடையாத காரணத்தால் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கூட்டணி அமைக்க ராகுல் காந்தி ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் திமுக தரப்பில் 30 தொகுதிகள் வரை மட்டுமே ஒதுக்க முன்வந்த நிலையில், காங்கிரஸ் 35 தொகுதிகளை வலியுறுத்தி வருகிறது. இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்ட தவெக, காங்கிரஸை ஈர்க்கும் வகையில் 60 தொகுதிகள், ஒரு துணை முதல்வர் பதவி மற்றும் மூன்று அமைச்சர் பதவிகள் என அதிரடி சலுகைகளை முன்வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தத் திடீர் அரசியல் நகர்வு முதல்வர் ஸ்டாலினுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவெக தரப்பில் வேட்பாளர் தேர்வு மற்றும் தேர்தல் நிதி மேலாண்மைக்கு காங்கிரஸின் அனுபவம் உதவும் என விஜய் நம்புவதால், ராகுல் காந்தியின் ஒப்புதலுக்காகக் காத்திருப்பதாகத் தெரிகிறது.

இந்நிலையில் டெல்லி காங்கிரஸ் தலைமை ஒருவேளை தவெக பக்கம் சாய்ந்தால், அது தமிழகத்தில் பல தசாப்தங்களாக இருந்து வரும் திமுக-காங்கிரஸ் உறவில் மிகப்பெரிய விரிசலை ஏற்படுத்துவதுடன், சட்டமன்றத் தேர்தல் களத்தின் ஒட்டுமொத்தப் போக்கையுமே மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.