நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம் (தவெக), காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் ஆதரவுடன் மாநிலத்தில் புதிய ஆட்சியை அமைத்துள்ளது. முதலமைச்சராக சி. ஜோசப் விஜய் பொறுப்பேற்றுள்ள இச்சூழலில், அதிமுகவைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் நேற்று தங்களது பதவிகளை திடீரென ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்துள்ளனர். இந்த விவகாரத்தில் ஆளுங்கட்சியான தவெக பெரும் குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளதாக அதிமுக, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தங்களது கடுமையான கண்டனங்களையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து வருகின்றன.
இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், தவெக-வின் குதிரைபேர அரசியலை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என்று கூட்டணி கட்சியான காங்கிரஸைச் சேர்ந்த கரூர் எம்.பி. ஜோதிமணி பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில், தமிழக மக்கள் சி. ஜோசப் விஜய்-ஐ ஒரு சிறப்பான அரசாங்கத்தைத் தர வேண்டும் என்றே முதலமைச்சராக்கியுள்ளனர் என்றும், அதற்கு கூட்டணி கட்சியாக காங்கிரஸ் என்றும் துணை நிற்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அதற்காக தவெக தேர்ந்தெடுக்கும் அனைத்து வழிமுறைகளையும் காங்கிரஸ் ஆதரிக்க முடியாது என்றும், மாற்றுக்கருத்துகளைத் தயங்காமல் வெளிப்படுத்துவதே தார்மீக ரீதியாகச் சரியானது என்றும் அவர் சாடியுள்ளார்.
மேலும், இந்தியாவில் காங்கிரஸை பலவீனப்படுத்த பாஜக முதலில் கையில் எடுத்த ஆயுதமே இந்த குதிரை பேரம்தான் என்று சுட்டிக்காட்டிய ஜோதிமணி, தமிழ்நாட்டில் காங்கிரஸ் குதிரை பேரத்தை ஆதரிக்கும், மாநிலத்திற்கு வெளியே எதிர்க்கும் என்கிற இரட்டை நிலைப்பாட்டை ஒருபோதும் எடுக்க முடியாது என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார். கொள்கைக்காக ராகுல் காந்தி சமரசமற்றுப் போராடி வரும் சூழலில், ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் இத்தகைய செயல்களுக்குக் காங்கிரஸ் துணை போனால், அது காந்தி, நேரு மற்றும் கொண்ட கொள்கைக்குச் செய்யும் வரலாற்றுத் துரோகமாக மாறிவிடும் என்றும் காட்டமாகப் பதிவு செய்துள்ளார்.
