குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், ஒரு அதிர்ச்சி கொலை சம்பவம் நடந்துள்ளது. தன் கள்ளக்காதலைத் தொடர வசதியாக, ரூபி என்ற பெண் தன் காதலன் இம்ரான் வாகேலா மற்றும் இரண்டு உறவினர்களின் உதவியுடன், தன் கணவர் சமீர் அன்சாரியைக் கொன்றார். கணவனைக் கொன்ற பிறகு, சடலத்தைத் துண்டு துண்டாக வெட்டி, தங்கள் வீட்டின் சமையலறைத் தரையின் அடியில் பள்ளம் தோண்டிப் புதைத்து, அதன் மேல் சிமெண்ட்டால் மூடி மறைத்துள்ளனர்.

சமீர் குறித்து யாராவது கேட்டால், அவர் வேலைக்காக வெளியூர் சென்றுவிட்டார் என்று ரூபி சுமார் ஒரு வருட காலமாகப் பொய் சொல்லி வந்துள்ளார். ​ரகசியத் தகவல் மூலம் இந்தச் சம்பவம் வெளியே வந்ததால், நகரக் குற்றப்பிரிவு போலீசார் அந்தப் பூட்டப்பட்ட வீட்டிற்குச் சென்று சமையலறைத் தரையைத் தோண்டி, சமீர் அன்சாரியின் எலும்புகளை மீட்டனர்.

ரூபியின் கள்ளக்காதல் விவகாரத்தைக் கணவர் எதிர்த்ததால் இந்தக் கொலையைச் செய்ததாக, கைது செய்யப்பட்ட கள்ளக்காதலன் இம்ரான் வாகேலா ஒப்புக்கொண்டுள்ளார். தற்போது போலீசார் இம்ரான் வாகேலாவை கைது செய்து, மீட்கப்பட்ட எலும்புகளை டி.என்.ஏ. சோதனைக்கு அனுப்பியுள்ளனர். கொலைக்குத் திட்டமிட்ட ரூபியும் அவளது உறவினர்கள் இருவரும் தலைமறைவாக உள்ளனர்.