உத்தரப் பிரதேச மாநிலத்தில் தனது மனைவியை கள்ளத்தொடர்பு இருப்பதாகச் சந்தேகித்த கணவர், அவரைத் தீர்த்துக்கட்ட கூலிப்படையை ஏவிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜனவரி 26-ஆம் தேதி, கணவருடன் இருசக்கர வாகனத்தில் சந்தைக்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்த மனைவியை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இடுப்பில் குண்டு பாய்ந்த நிலையில் அவர் உயிர் தப்பினார். இந்தச் சம்பவத்தை அக்கம் பக்கத்து வீட்டினர் மீது பழிபோட நினைத்த கணவர், அவர்கள் மீது புகார் அளித்து நாடகமாடினார்.
இருப்பினும், காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது கணவனின் பொய்கள் அம்பலமானது. கூலிப்படைக்கு 50,000 ரூபாய் கொடுத்து தன் மனைவியைக் கொல்ல அவர் சதி செய்தது தெரியவந்தது. இதற்காகப் பழைய குற்றவாளியான விபோர் சர்மா என்பவரிடமிருந்து துப்பாக்கி வாங்கப்பட்டுள்ளது.
தற்போது கணவர் உட்பட ஐந்து பேரைக் கைது செய்துள்ள போலீஸார், அவர்களிடமிருந்து ஆயுதங்களைப் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
