உத்தரபிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில் மனதை உடைக்கும் வகையில், தாயின் கையில் மூன்று குழந்தைகள் உயிரிழந்த கொடூர சம்பவம் ஒன்று கடந்த ஜூன் மாதம் நடந்தது. பஃபண்டா பகுதியில் வசித்து வரும் பிரியங்கா என்ற பெண், தனது நான்கு குழந்தைகளில் மூன்று பேரை செங்கர் ஆற்றில் வீசி கொன்றதாக காவல்துறையிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். இதில் மூத்த மகன் சோனு மட்டும் உயிர் தப்பிய நிலையில், அதே நாள் இரவே போலீசாரிடம் புகார் அளித்ததால் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

காவல்துறையினரின் விசாரணையில், பிரியங்கா தனது உறவினரான ஆஷிஷ் என்ற டேனியுடன் கள்ளக்காதல் உறவில் இருந்ததாகவும், அவர் கூறிய வார்த்தைகளால் மோசமான முடிவெடுத்ததாகவும் தெரியவந்துள்ளது. “உன் குழந்தைகளை இல்லாமல் செய்துவிட்டால் நானும் நீயும் சேர்ந்து வாழலாம்” என தன்னைத் தூண்டியதாக பிரியங்கா தெரிவித்துள்ளார். இதையடுத்து ஜூன் 27-ம் தேதி நான்கு குழந்தைகளையும் செங்கர் ஆற்றில் அழைத்துச் சென்று மூன்று பேரை தள்ளி கொன்றுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையில் புகாரின் அடிப்படையில், அவுரையா கோட்வாலி காவல் நிலையத்தில் கொலை வழக்குப் பதியப்பட்டது. குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக சோனுவின் நேரடி சாட்சி, மருத்துவ அறிக்கைகள் மற்றும் பிற சாட்சிகள் இருந்தன. வழக்கு விசாரணையின் போது மொத்தம் 7 பேர் சாட்சியாகவே இருக்க, முக்கிய சாட்சியாக சோனு நேரில் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

இந்த வழக்கை கவனமாக விசாரித்த நீதிமன்றம், தாயாகிய பிரியங்கா தனது சொந்தக் குழந்தைகளை திட்டமிட்டு கொன்றது மிகவும் கொடூரமானது என்றும், சமூகத்தில் இத்தகைய நபர் வாழக்கூடாது எனக் கருத்து தெரிவித்தது. இதனையடுத்து, பிரியங்காவுக்கு மரண தண்டனை, மேலும் தூண்டிய ஆஷிஷ் என்ற டேனிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. இந்த சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.