சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், அந்நாட்டின் முன்னாள் பிரதமருமான இம்ரான் கானின் உடல்நிலை குறித்து சர்வதேச கிரிக்கெட் ஜாம்பவான்கள் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளனர். அவருக்கு முறையான மருத்துவ வசதிகளையும், கண்ணியமான பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என பாகிஸ்தான் அரசுக்கு அவர்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களான சுனில் கவாஸ்கர், கபில்தேவ் உள்ளிட்ட 14 நாடுகளைச் சேர்ந்த முன்னாள் சர்வதேச கிரிக்கெட் கேப்டன்கள் ஒன்றிணைந்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர். இதில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் வா, ஆலன் பார்டர், கிரெக் சேப்பல், இங்கிலாந்தின் நாசர் ஹுசைன், டேவிட் கோவர் மற்றும் கிளைவ் லாயிட் உள்ளிட்ட பல முன்னணி வீரர்கள் கையெழுத்திட்டுள்ளனர். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
“சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இம்ரான் கான் ஒரு மாபெரும் ஆளுமை. 1992-ல் பாகிஸ்தான் உலகக்கோப்பை வெல்ல அவரது தலைமைப் பண்பே முக்கியக் காரணம். அரசியலுக்கு அப்பாற்பட்டு, அவர் ஒரு நாட்டின் பிரதமராகவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். தற்போது சிறையில் இருக்கும் அவரது உடல்நிலை மோசமடைந்து வருவது எங்களுக்கு மிகுந்த கவலையை அளிக்கிறது.”
கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் சிறையில் இருக்கும் இம்ரான் கானுக்கு, தற்போது வலது கண்ணில் 85 சதவீத பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதைக் குறிப்பிட்ட முன்னாள் வீரர்கள், இம்ரான் கான் விரும்பும் மருத்துவ நிபுணர்களைக் கொண்டு அவருக்கு உடனடியாக தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
மைதானத்தில் நிலவும் போட்டி உணர்வு ஆட்டம் முடிந்ததும் முடிந்துவிடும், ஆனால் பரஸ்பர மரியாதை என்றும் நிலைத்திருக்கும் எனச் சுட்டிக்காட்டியுள்ள வீரர்கள், கீழ்க்கண்ட கோரிக்கைகளை பாகிஸ்தான் அரசிடம் முன்வைத்துள்ளனர்: இம்ரான் கானுக்கு உடனடி மற்றும் தொடர்ச்சியான மருத்துவ சிகிச்சையை உறுதி செய்ய வேண்டும். சர்வதேச தரத்தின்படி, அவரை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் அவரைத் தவறாமல் சந்திக்க அனுமதிக்க வேண்டும். சட்ட ரீதியான நடவடிக்கைகளில் எவ்வித தாமதமும் இன்றி வெளிப்படைத்தன்மையைப் பின்பற்ற வேண்டும்.
மேலும் விளையாட்டு என்பது நாடுகளுக்கு இடையிலான ஒரு பாலம். அந்தப் பாலமாகத் திகழ்ந்த இம்ரான் கானுக்கு உரிய நீதியும், கண்ணியமும் வழங்கப்பட வேண்டும்” என அந்த அறிக்கையில் உருக்கமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
