வங்கதேசத்தில் பல ஆண்டுகளாக நீடித்து வந்த அரசியல் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இன்று தாரிக் ரஹ்மான் (Tarique Rahman) நாட்டின் புதிய பிரதமராகப் பதவியேற்றார். கடந்த பிப்ரவரி 12-ம் தேதி நடந்த பொதுத் தேர்தலில் தாரிக் ரஹ்மானின் ‘வங்கதேச தேசிய கட்சி’ (BNP) தலைமையிலான கூட்டணி 212 இடங்களைக் கைப்பற்றி இமாலய வெற்றி பெற்றது.
சுமார் 17 ஆண்டுகால லண்டன் வாசத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய தாரிக் ரஹ்மான், இன்று டாக்காவில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தின் தெற்கு பிளாசாவில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார்.
அதிபர் முகமது ஷஹாபுதீன் அவருக்குப் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். கடந்த 35 ஆண்டுகளாகப் பெண்கள் வசம் இருந்த வங்கதேசப் பிரதமர் நாற்காலியில், 1991-க்குப் பிறகு அமரும் முதல் ஆண் பிரதமர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
இந்த விழாவில் இந்திய அரசின் பிரதிநிதியாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்த பிறகு அமைக்கப்பட்ட இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் வசம் இருந்த அதிகாரம், இன்று முறைப்படி தாரிக் ரஹ்மானிடம் ஒப்படைக்கப்பட்டது.
