
திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பி எம் ஸ்ரீ பள்ளி திட்டத்தை ஒப்புக்கொண்டால் மட்டும் தான் தமிழகத்திற்கு கல்விக்கான நிதியை வழங்குவோம் என்று மத்திய அரசு கட்டாயப்படுத்துகின்றது. இந்த திட்டத்தின் மூலமாக தரமான கல்வியை வழங்கப் போவதாக மத்திய அரசு கூறி வருகிறது. ஆனால் தமிழகம் ஏற்கனவே தரமான கல்வியை தான் மாணவர்களுக்கு வழங்கி வருகிறது. பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டத்தின் மூலமாக புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு கொண்டு வருவதை தெள்ளத் தெளிவாக நாங்கள் தெரிந்து கொண்டோம்.
முதல்வர், துணை முதல்வர் மற்றும் மக்கள் கோலமிட்டு மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிராக எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். மத்திய அரசு மீண்டும் ஒரு மொழிப்போரை கொண்டு வரக்கூடாது என்ற வகையில் தமிழக அரசின் கண்டனத்தை நாங்கள் தெரிவித்தோம். இஸ்ரோ உட்பட மருத்துவம் மற்றும் பொறியியல் என இன்று சாதித்தவர்கள் அனைவருமே இரு மொழிக் கொள்கையை ஏற்று படித்தவர்கள் தான். புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்கும் முன் இந்தியாவில் கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலத்தின் சார்பில் ஒரு பிரதிநிதியை அழைத்து கலந்து ஆலோசித்து இருந்தால் சரியாக இருந்திருக்கும். ஆனால் அதை செய்யாமல் அவர்களே ஒரு திட்டத்தை உருவாக்கியுள்ளனர்.
நடைமுறை சாதனைகள் மற்றும் அரசியல் அமைப்பு உரிமைகளை வலியுறுத்தி இந்தியாவின் கூட்டாட்சி அமைப்புகள் பரஸ்பரம் மரியாதையை வேண்டுகிறது என்ற விளக்கத்தை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை வெறும் கடிதம் மற்றும் காகிதம் என்று பார்க்காமல் 43 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் அடங்கியுள்ளது என்பதை உணர்ந்து மத்திய அரசு நிதியை வழங்க வேண்டும். மத்திய அரசு பிளாக்மெயில் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் . நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்த போது எதுவுமே சொல்லாமல் பிஎம் ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்து போட்டு பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்வது பேரம் பேசுவதை கடந்து அதை பிளாக்மெயிலாக தான் பார்க்க முடிகின்றது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.