
திருப்பூர் மாவட்டம் பட்டுத்துறையை சேர்ந்த கல்லூரி மாணவி திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார். இவர் பட்டுத்துறையில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு வந்து அங்கிருந்து திண்டுக்கல்லுக்கு பேருந்தில் பயணம் செய்வது வழக்கம்.
நேற்று கல்லூரி முடிந்து மாணவி திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து பழனி செல்லும் அரசு பேருந்தில் ஏறி உள்ளார். அப்போது நடத்துனர் ஒட்டன்சத்திரத்தில் பேருந்து நிற்காது. நீ பேருந்தில் ஏறாதே என கல்லூரி மாணவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை இறக்கி விட்டு சென்றார்.
இந்த நிலையில் நீண்ட நேரமாகியும் கல்லூரி மாணவி வீட்டுக்கு வராததால் பெற்றோர் அவரை தொடர்பு கொண்டு பேசினர். அப்போது மாணவி நடந்த விஷயத்தை கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் தங்களது மகளை ஒட்டன்சத்திரத்திற்கு காரில் அழைத்து வந்துள்ளனர்.
நேற்று மாலை 6 மணிக்கு அதே பேருந்து பழனியில் இருந்து திரும்பி ஒட்டன்சத்திரத்திற்கு வந்துள்ளது. அப்போது மனைவியின் பெற்றோர் பேருந்து நடத்துனரிடம் விஷயத்தை கேட்டனர். அவர் சிதம்பரம், திண்டுக்கல், பழனி மட்டும் தான் செல்லும்.
அதனால்தான் பேருந்தில் ஏற வேண்டாம் எனக் கூறியதாக தெரிவித்தார். இதனை கேட்டு கோபமடைந்த மாணவியின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.