ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள சோளிங்கர் அடுத்த புலிவலம் கிராமத்தில் ஜெகத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தச்சு வேலை செய்துவரும் நிலையில் இவருக்கு 10-ம் வகுப்பு படித்து வந்த ஜனனி என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமிக்கு 15 வயது ஆகிறது. இந்த சிறுமி தற்போது கோடை விடுமுறை என்பதால் தன் தந்தையின் அக்கா மகள்களான லக்ஷயா என்ற 16 வயது சிறுமி மற்றும் சரண்யா ஆகியோருடன் தன்னுடைய பாட்டி வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை திடீரென மர்ம நபர் ஒருவர் சிறுமியின் வீட்டிற்குள் நுழைந்த நிலையில் கதவை உள்பக்கமாக பூட்டி கொண்டார்‌.

அவர் ஜனனியை கத்தியால் சரமாரியாக குத்திய நிலையில் இதனை தடுக்க வந்த லக்ஷயாவையும் அவர் கத்தியால் குத்தினார். அவர்களின் அலறல் சத்தத்தை கேட்டு பாட்டி கீழே இறங்கி வந்த போது வீடு உள்பக்கமாக பூட்டி கிடந்தது தெரியவந்தது. பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியோடு கதவை கடப்பாரையால் உடைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்று பார்த்த போது ஜனனி ரத்த  வெள்ளத்தில் பிணமாக கிடந்த நிலையில் லக்ஷயாவிற்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. கத்தியுடன் வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்த நிலையில் அவரைப் பிடித்து மக்கள் தர்ம அடி கொடுத்தனர்.

இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அந்த வாலிபரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் சுப்பிரமணி என்ற 21 வயது வாலிபர் என்பது தெரியவந்தது. இந்த வாலிபர் ஜனனியை காதலிப்பதாக கூறி பலமுறை தொந்தரவு செய்த நிலையில் அவர் ஏற்க மறுத்ததால் கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.