
சென்னை வியாசர்பாடி பகுதியில் ராஜ்குமார் (38)-விஜயலட்சுமி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 5 மற்றும் 2 1/2 வயதில் ஏற்கனவே இரு பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில் கடந்த 9 நாட்களுக்கு முன் மீண்டும் 3-வதாக பெண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்நிலையில் கடந்த 7-ம் தேதி விஜயலட்சுமி வீட்டில் குளித்துக் கொண்டிருந்தார். அதன் பின் அவர் வெளியே வந்த போது பிறந்த குழந்தையின் வயிற்றில் கத்திக்குத்து காயங்கள் இருந்தது. ரத்த வெள்ளத்தில் கிடந்த குழந்தையை பதறிப் போய் விஜயலட்சுமி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
அங்கு குழந்தை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 9-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இது தொடர்பாக குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ராஜ்குமார் குழந்தையை கொன்றது தெரியவந்தது. அதாவது தனக்கு அடுத்தடுத்து பெண் குழந்தைகள் பிறந்ததால் ஆத்திரத்தில் கத்தியால் 3 முறை பச்சிளம் குழந்தையின் வயிற்றில் குத்தி கொடூரமாக கொன்றுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவரை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.