உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் நபர் ஒருவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் ஒரே நாளில் திருமணம் நடத்த திட்டமிடப்பட்டு, தந்தை முன்னிலையிலேயே முறைப்படி திருமணச் சடங்குகள் அனைத்தும் இனிதே முடிந்தன.

மேலும் ஒரு மகளுக்கு உள்ளூர் மாப்பிள்ளையுடனும், மற்றொரு மகளுக்கு பிஜ்னோர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞருடனும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு மணமக்களை வழிஅனுப்பும் (பிதாய்) சடங்கு தொடங்கியபோது, ஒரு மகளை மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்த தந்தை, இரண்டாவது மகளை அனுப்ப திடீரென மறுத்துவிட்டார்.

இதனால் திருமணத்தை முன்னின்று நடத்திய அந்த தந்தை, திடீரென தனக்கு மாப்பிள்ளையைப் பிடிக்கவில்லை என்றும், அதனால் தனது மகளை அவருடன் அனுப்ப முடியாது என்றும் பிடிவாதம் பிடித்தார். இதனால் திருமண மண்டபத்தில் பெரும் குழப்பமும் அதிர்ச்சியும் ஏற்பட்டது. இரு வீட்டாரும் எவ்வளவோ சமாதானம் செய்தும், பஞ்சாயத்து கூட்டியும் தந்தை தனது முடிவை மாற்றிக்கொள்ளவில்லை.

இந்நிலையில் இறுதியில், முறைப்படி திருமணம் முடிந்த நிலையிலும், மாப்பிள்ளை தனது மனைவியை அழைத்துச் செல்ல முடியாமல் வெறும் கையுடன் ஊர் திரும்ப நேர்ந்தது. இந்த வினோதமான சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.