
உத்தரபிரதேச மாநிலத்தின் மெயின்புரி மாவட்டத்தில் அதிர்ச்சிக்குரிய சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. கன்சேபூர் பம்பா அருகே உள்ள வயலில் உள்ள ஆலமரத்தில், ஒரு டீனேஜ் பெண்ணின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டதால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குடும்பத்தினரிடமும், உறவினர்களிடமும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விசாரணையில் இறங்கிய போலீசாருக்கு , இது காதல் சம்பந்தமாக ஏற்பட்ட தற்கொலை எனத் தெரியவந்தது, பாதிக்கப்பட்ட அந்த இளம் பெண், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது பாட்டியின் இறப்புக்குப் பிறகு, ஃபரூக்காபாத் மாவட்டம் முகமதுபாத்தில் வசிக்கும் தாய் மாமா வீட்டிற்குச் சென்றிருந்தார்.

அங்கு தாய் மாமாவின் மகனுடன் நெருக்கம் அதிகரித்து, இருவரும் காதலிக்க தொடங்கியதாக கூறப்படுகிறது. ஆனால், குடும்பத்தினருக்கு இது தெரியவந்ததும், அவசரமாக மாமாவின் மகனுக்கு வேறு திருமணம் செய்யப்பட்டது. இருப்பினும், திருமணத்திற்குப் பிறகும், இருவருக்கும் இடையிலான உறவு தொடர்ந்தது.
சமீபத்தில், அந்த இளம் பெண், காதலனை சந்திக்க தந்தையின் மொபைல் மூலம் அழைத்துள்ளார். காதலன், குறிப்பிட்ட ஒரு பகுதியில் தன்னை சந்திக்க அழைத்ததாக கூறப்படுகிறது. அங்கு இருவரும் சந்தித்தபோது, அவருடன் தப்பிச் செல்ல வேண்டும் என்று காதலி வற்புறுத்தியுள்ளார்.
ஆனால், காதலன் இந்த முயற்சியை மறுத்துவிட்டு, தனது தாய், தந்தை, தாய் மாமா மற்றும் அந்தப் பெண்ணின் தந்தையை அழைத்தார். பின்னர் அந்தப் பெண், அருகில் உள்ள உறவினர் வீட்டிற்குக் பேசி அழைத்துச்செல்லப்பட்டார். குடும்பத்தினர் சமாதானப்படுத்த முயன்றும், அவர் பிடிவாதமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வயல்களுக்கு சென்ற அந்த இளம் பெண், தனது பள்ளி உடையின் துப்பட்டாவைப் பயன்படுத்தி, ஆலமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவல் தெரிந்ததும் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.
இந்த சம்பவம் தொடர்பாக தாய் மாமனின் மகன், தாய் மாமா மற்றும் மற்றொரு உறவினர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காதலன், திருமணத்திற்கு பிறகு அந்த காதல் உறவை முறித்துக்கொள்ள விரும்பியதாகவும், ஆனால் காதலி திருமணத்துக்காக வற்புறுத்தியதாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளர். இச்சம்பவம் பெண்ணின் குடும்பத்தில் பெரும் அதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது