தெலங்கானா மாநிலத்தில் சாதி பாகுபாடு காரணமாக 23 வயதுடைய தலித் பெண் மருத்துவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹனம்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த ஷரண்யா என்ற அந்த இளம்பெண், தனியார் மருத்துவமனையில் ஹவுஸ் சர்ஜனாகப் பணியாற்றி வந்தார்.
அதே மருத்துவமனையில் பணியாற்றிய தனது சக ஊழியரான ஒருவரை அவர் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்த நிலையில், ஷரண்யாவின் சாதியைக் காரணம் காட்டி அந்த நபர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மனமுடைந்த ஷரண்யா, தனது விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகரீகமடைந்ததாகக் கூறப்படும் தற்காலத்திலும், படித்த இளைஞர்களிடையே கூட சாதியக் கட்டமைப்புகள் ஆழமாக வேரூன்றி இருப்பது கவலையளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
தனது மகளின் உயிரிழப்பிற்கு காரணமான அந்த நபர் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென ஷரண்யாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சாதி என்ற பெயரில் ஒரு இளம் உயிரின் கனவுகள் சிதைக்கப்பட்டிருப்பது கல்வி கற்ற சமூகத்தின் மனநிலையை மீண்டும் ஒருமுறை கேள்விக்குறியாக்கியுள்ளது.
