ஜோத்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த ஒரு சம்பவம் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவரின் கள்ளத் தொடர்பு குறித்து சந்தேகம்கொண்ட மனைவி, தனது கணவரை நேரில் எதிர்த்து அலுவலக வளாகத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதைத் தொடர்ந்து, அவர் தனது கணவரின் காலரை பிடித்து அடிக்கின்ற காட்சிகள் வீடியோவில் பதிவாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த தகராறை கண்ட மக்கள் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு தகவல் வழங்க, போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரையும் சமாதானப்படுத்த முயன்றனர். இருப்பினும், வாக்குவாதம் வன்முறையாக மாறியதால் இருவரும் கைது செய்யப்பட்டனர். போலீசார் இருவரிடமும் தலா ரூ.50,000 பத்திரத்தில் கையெழுத்தெடுத்து, 6 மாதம் ஒருவரையொருவர் தொடர்பு கொள்ளக்கூடாது என்ற நிபந்தனையுடன் அவர்களை விடுதலை செய்தனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, பலர் ஆண்களின் பாதுகாப்பிற்கும் உரிய கவனம் தேவை என்றும், பெண்கள் ஆணையத்தைப் போன்று ஆண்கள் பாதுகாப்பு ஆணையமும் உருவாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். திருமண பிரச்சனைகள், தவறான குற்றச்சாட்டுகள் போன்ற காரணங்களால் பாதிக்கப்படும் ஆண்களுக்கு ஆதரவு தரும் அமைப்புகள் தேவைப்படுகிறது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.