உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் ஹர்ஷ்வர்தன் ஜெயின் என்ற நபர், ஒரு சொகுசு பங்களாவை வாடகைக்கு எடுத்து அதில் நான்கு போலி நாடுகளுக்கான தூதரகங்களை அமைத்திருந்தார். மேற்கு ஆர்க்டிகா, சபோர்கா, பவுல்வியா மற்றும் லோடோனியா எனும் கற்பனையான நாடுகள் பெயரில் தூதரகம் வைத்திருந்தது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து எஸ்.டி.எஃப். குழு அதனை சோதனை செய்தது.
அந்த இடத்தில் நடந்த சோதனையில், போலீசார் 4 சொகுசு கார்கள், 12 போலியான ராஜதந்திர பாஸ்போர்ட்கள், வெளியுறவு அமைச்சக போலி முத்திரைகள், 2 போலி பான் கார்டுகள், 2 போலி பத்திரிகையாளர் கார்டுகள், 34 போலியான சீல்கள், ரூ.44.7 லட்சம் ரொக்கம், பல்வேறு வெளிநாட்டு நாணயங்கள், 18 போலி எம்பஸி எண் தகடுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இது அனைத்தும் ஹர்ஷ்வர்தன் நடத்தி வந்த அமைப்பு மிகப்பெரிய மோசடியாக இருந்ததை உறுதிப்படுத்தியது.
போலி தூதரகத்தின் உள்ளே பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுடன் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களை ஹர்ஷ்வர்தன் வைத்திருந்தார். இதன்மூலம் மக்கள் அவரை உண்மையான இராஜதந்திர அதிகாரி என நம்பச் செய்தார். இதனை அடிப்படையாக கொண்டு, வெளிநாட்டில் வேலை தருவதாக கூறி பலரை ஏமாற்றி பணம் பறித்துள்ளார்.
பிற நாடுகளில் வேலை வாய்ப்புகள் மற்றும் வர்த்தக வாய்ப்புகள் என்ற பெயரில் ஹர்ஷ்வர்தன் ஜெயின் தனது மோசடியை விரிவுபடுத்தினார். அவர் நான்கு போலியான நாடுகளுக்காக தூதராக தன்னை அறிமுகப்படுத்தி, ஷெல் நிறுவனங்கள் மூலம் ஹவாலா பண பரிமாற்றங்களை மேற்கொண்டார். இது வெளிநாட்டு குற்றவாளிகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படுகிறது.
அவர் உருவாக்கிய போலியான பாஸ்போர்ட்கள், ராஜதந்திர அட்டை எண்கள், வெளிநாட்டு நாணயங்கள் போன்றவை இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கே அச்சுறுத்தலாக இருந்தன. மக்களை வேலையளிக்கிறோம் என ஏமாற்றி, சட்டவிரோத பண பரிவர்த்தனைகளிலும் ஈடுபட்டுள்ளார்.
ஒரு மூத்த எஸ்.டி.எஃப். அதிகாரி கூறுகையில், “இந்த மோசடி முற்றிலும் திட்டமிட்டு, நன்கு ஒழுங்கமைக்கப்பட்டதாகும். ஹர்ஷ்வர்தன் ஒருவரே இத்தனை பரபரப்பான வலையமைப்பை நடத்தவில்லை. அவருடன் தொடர்புடைய மேலும் பல இந்தியா மற்றும் வெளிநாட்டு நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்படுகிறது” என்று தெரிவித்தார்.
இந்த மோசடிக்கு எதிராக கவிநகர் காவல் நிலையத்தில் ஹர்ஷ்வர்தன் ஜெயின் மீது மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தல், தேசிய பாதுகாப்பு பாதிப்பு உள்ளிட்ட பல கடுமையான குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அவரிடம் மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. தூதரகங்கள் என்ற பெயரில் நாட்டில் நடந்த மிகப்பெரிய கற்பனையும் மோசடியும் இது என கூறப்படுகிறது. இந்த வழக்கின் மூலம், போலி அலுவலகங்கள், ஷெல் நிறுவனங்கள், வெளிநாட்டு ஏமாற்று வேலை வாய்ப்புகள் தொடர்பாக அரசும், காவல்துறையும் கடுமையாக கண்காணிக்க வேண்டிய தேவை தெளிவாகியுள்ளது.
