இன்ஸ்டாவில் நவீன் உல் ஹக்கை சந்தித்த புகைப்படத்தை பகிர்ந்து, உங்களை மீண்டும் சந்தித்ததில் மகிழ்ச்சி என்று கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

2023 உலக கோப்பையில் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நேற்று ஆப்கானிஸ்தானுடன் இந்தியா விளையாடியது. இப்போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக 2வது வெற்றியைப் பெற்றது.

இந்த போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ராவின் செயல்பாடுகள் அன்றைய தினத்தில் சிறப்பாக இருந்தாலும், விராட் கோலி மற்றும் நவீன் உல் ஹக் ஆகியோர் மைதானத்தில் கைகுலுக்கி சிரித்து பேசியது தான்  ரசிகர்களின் இதயங்களை வென்று பரபரப்பாக பேசப்படுகிறது. வர்ணனையாளர்கள் இருவரையும் தங்கள் உறவை சீர்குலைத்த வேறுபாடுகளை சரிசெய்ததற்காக பாராட்டினர்.

விராட் – நவீன் மோதல் எப்போது தொடங்கியது?

2023 ஐபிஎல்லில் பிரபல கிரிக்கெட் வீரர்களான விராட் கோலி, நவீன்-உல்-ஹக் மற்றும் கௌதம் கம்பீர் ஆகியோருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. லக்னோவில் உள்ள ஏகானா ஸ்டேடியத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எல்எஸ்ஜி) இடையேயான போட்டியின் போது இந்த சம்பவம் நடந்துள்ளது. நவீன் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது கோலியும் ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல் ஹக்கும் ஆடுகளத்தில் அனல் பறக்கும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பதற்றம் தொடங்கியது. போட்டி முடிந்த பின்னும் இது தொடர்ந்தது. லக்னோ ஆலோசகர் கம்பீரும் இதில் தலையிட்டு கோலியிடம் மோதினார். அதன்பின் கோலி ரசிகர்கள் நவீன் மைதானத்தில் பீல்டிங் செய்யும் போதெல்லாம் ‘கோலி, கோலி’ என கத்தி வெறுப்பேற்றி வந்தனர். நேற்றைய போட்டியில் ரசிகர்கள் நவீனை வார்த்தையால் தாக்கிய நிலையில், கோலி அவ்வாறு செய்யாதீர்கள் என ரசிகர்களை கேட்டுக்கொண்டார்.  அதன்பின் தான் நவீன் கோலியிடம் போய் பேச, இருவரும் இப்போது நட்பாக மாறியுள்ளனர்.

நேற்றைய ஆட்டத்தின் போது வர்ணனை செய்த கௌதம் கம்பீர், வீரர்கள் தங்கள் வேறுபாடுகளை சரிசெய்ததை கண்டு மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார். ஆட்டம் முடிந்ததும் நவீனை சந்தித்த கம்பீர், அவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி நவீன் உல் ஹக், நாம் மீண்டும் சந்திக்கும் வரை! என தெரிவித்தார்.. அந்தப் பதிவிற்கு கீழ் நவீன் உல் ஹக் “விரைவில் சந்திப்போம் சார்” என கமெண்ட் செய்தார். இந்த பதிவு வைரலாகி வருகிறது..

அதேபோல கம்பீர் வர்ணனை செய்யும் போது ஜதின் சப்ருவிடம் கூறியதாவது”இது ஒரு சிறந்த சைகை, இனி வரும் போட்டிகளில், ஒவ்வொரு தொழில்முறை கிரிக்கெட் வீரரும் நாட்டிற்காக விளையாடுவதற்கும், ஐபிஎல்லில் விளையாடுவதற்கும் இந்த நிலைக்கு வர கடுமையாக உழைக்கிறார்கள் என்பதால், விராட்டின் சைகையை மக்கள் நினைவுபடுத்துவார்கள் என்று நம்புகிறேன்.” என்று கூறினார்.

மேலும் “உங்களால் யாரையும் ஆதரிக்க முடியாவிட்டால், அவரை விமர்சிக்காதீர்கள். உங்களுக்குப் பிடித்த வீரரை ஆதரிக்க உங்களுக்கு உரிமை உண்டு, ஆனால் ஒரு வீரரை விமர்சிக்க உங்களுக்கு உரிமை இல்லை” என்று இந்திய கூறினார்.

போட்டிக்கு பின் பேசிய நவீன் உல் ஹக், “விராட் கோலி ஒரு நல்ல வீரர், டெல்லி அவரது சொந்த மைதானம், மக்கள் தங்கள் சொந்த ஊரான வீரரை ஆதரித்ததால் அவர்கள் ‘கோலி, கோலி’ என்று கோஷமிட்டனர். நாங்கள் கைகுலுக்கிக் கொண்டோம். அது எப்போதும் மைதானத்தில் தான் நடக்கும்; மைதானத்திற்கு வெளியே எதுவும் இல்லை. மக்கள் அதை பெரிதாக்குகிறார்கள். நான் கைகுலுக்கிய பிறகு, விராட் அதை முடித்துவிடுவோம் என்று அவர் கூறினார். நான் சரி, முடித்துவிடுவோம் என்றேன், நாங்கள் கைகுலுக்கி கட்டிப்பிடித்தோம்.” என்று கூறினார்.

ஐபிஎல் மோதலின் போது அபராதம் விதிப்பு :

ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மூவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது. கோலி மற்றும் கம்பீர் லெவல் 2 குற்றத்திற்காக அவர்களது போட்டி கட்டணத்தில் 100% அபராதம் விதிக்கப்பட்டது, அதே நேரத்தில் நவீன்-உல்-ஹக் லெவல் 1 குற்றத்திற்காக 50% அபராதம் விதிக்கப்பட்டது. மூவரும் தத்தம் குற்றங்களை ஒப்புக்கொண்டனர் மற்றும் தடைகளை ஏற்றுக்கொண்டனர்.

இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியதுடன், பரபரப்பாக பேசப்பட்டது. தகராறு இருந்தபோதிலும், RCB எல்எஸ்ஜிக்கு எதிராக 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.