உலக கோப்பையில் ஆஸ்திரேலிய அணியை 134 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்தது தென்னாப்பிரிக்க அணி..

இந்தியாவில் 2023 ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று 10வது போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் லக்னோ ஏகனா ஸ்டேடியத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.. அதன்படி தென்னாப்பிரிக்க அணியின் துவக்க வீரர்களாக கேப்டன் டெம்பா பவுமா மற்றும் குயிண்டன் டி காக் இருவரும் களமிறங்கி நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். டி காக் சிறப்பாக ஆடி அரைசதம் கடந்தார். இந்த தொடக்க ஜோடி 108 ரன்களில் தான் பிரிந்தது. 19.4வது ஓவரில் டெம்பா பவுமா 35 ரன்கள் சேர்த்த நிலையில்  அவுட் ஆனார்..

இதையடுத்து ராஸ்ஸி வான் டெர் டுசென் மற்றும் குயிண்டன் டிகாக் இருவரும் சேர்ந்து சிறிது நேரம் ஆடிய நிலையில் வான் டெர் டுசென் 26 ரன்கள் சேர்த்து வெளியேறினார். பின் எய்டன் மார்க்ரம் உள்ளே வர, மறுமுனையில் சிறப்பாக ஆடிய குயிண்டன் டி காக் சதம் அடித்தார். கடந்த போட்டியை போலவே இந்த போட்டியிலும் டி காக் தொடர்ந்து 2வது சதம் அடித்து அசத்தினார். டி காக் 106 பந்துகளில் 8 பவுண்டரி, 5 சிக்சர் உட்பட 109 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதையடுத்து மிடில் வரிசையில் எய்டன் மார்க்ரம் மற்றும் ஹென்ரிச் கிளாசன் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

பின் சிறப்பாக அரைசதமடித்த மார்க்ரம் 44 பந்துகளில் 56 ரன்கள் சேர்த்து வெளியேறினார். தொடர்ந்து கிளாசன் 29 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதன்பின் கடைசியில் டேவிட் மில்லர் 17 ரன்களும், மார்கோ ஜான்சன் 26 ரன்களும் சேர்த்து அவுட் ஆக இறுதியில் தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் குவித்தது. ரபாடா மற்றும் கேசவ் மகாராஜ் இருவரும் ரன் ஏதும் எடுக்காமல் களத்தில் இருந்தனர். தென்னாப்பிரிக்கா அணி தொடக்கம் சிறப்பாக இருந்த நிலையில், 340+ ரன்கள் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசியில் மார்க்ரம், கிளாசன் அடுத்தடுத்து அவுட் ஆன நிலையில் 30 ரன்கள் குறைவாகவே எடுத்தது.

பின்னர் இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. துவக்க வீரர்களான மிட்செல் மார்ஷ் (7ரன்கள்) மார்கோ ஜான்சனின் 6வது ஓவரில் பவுமாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பின் லுங்கி என்கிடியின் அடுத்த 7வது ஓவரில் டேவிட் வார்னர் 13 ரன்களில் வான் டெர் டுசெனிடம் வெளியேறினர்.. தொடர்ந்து ஸ்டீவ் ஸ்மித் 19, ஜோஸ் இங்கிலீஷ் 5, மேக்ஸ்வெல் 3, மார்கஸ் ஸ்டோய்னிஸ் 5 என டாப் பேட்டர்கள் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதனால் ஆஸ்திரேலியா அணி 17.2 ஓவரில் 70 ரன்களுக்கு 6 விக்கெட் இழக்க கிட்டத்தட்ட ஆட்டம் அப்படியே தென்னாப்பிரிக்கா பக்கம் சென்றது. இதையடுத்து மார்னஸ் லாபுசாக்னே மற்றும் மிட்செல் ஸ்டார்க் இருவரும் ஜோடி சேர்ந்து பொறுமையாக ஆடி 60 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பின் ஸ்டார்க் 27 ரன்களிலும், லாபுசாக்னேவும் 46 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

பின் வந்த கேப்டன் பேட் கம்மின்ஸ் 22 ரன்களும்,  ஹேசில்வுட் 2 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணி 40.5  ஓவரில் 177 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் 134 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. ஜாம்பா 11 ரன்னில் அவுட் ஆகாமல் இருந்தார். தென்னாப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக ரபாடா 3 விக்கெட்டுகளும், மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், ஷம்ஸி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்க அணி ( தொடர்ந்து 2 வெற்றி) புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு சென்றது. ஆஸ்திரேலிய அணி விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியடைந்து 9வது இடத்தில் உள்ளது.