பைலட் திமிங்கல வகைகள் கூட்டமாக செல்லும்போது ஒன்றை பின் தொடர்ந்து மற்றவைகள் செல்லும் பழக்கம் கொண்டவை. இந்நிலையில் நேற்று முன் தினம் ஏராளமான பைலட் திமிங்கலங்கள் ஆஸ்திரேலியாவின் மேற்குக் கடற்கரை பகுதியில் கரை ஒதுங்க தொடங்கின. இதுகுறித்து பல்லுயிர் பாதுகாப்புத் துறை அதிகாரி கூறுகையில், “இதுவரை 51 பைலட் திமிங்கலங்கள் உயிரிழந்து விட்டன. இன்னும் 46 திமிங்கலங்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றன.
அவற்றை ஆழமான பகுதிகளுக்கு கொண்டு செல்ல முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். திமிங்கலங்களை எங்களால் காப்பாற்ற முடியுமோ அத்தனையும் காப்பாற்றுவோம்” எனக் கூறியுள்ளார். திமிங்கலங்களை காப்பாற்றும் குழுவில் கால்நடை மருத்துவர்களும் கடல் விலங்கின நிபுணர்களும் இருக்கின்றனர். அனைவரும் ஒன்றிணைந்து திமிங்கலங்களை கடலுக்குள் அனுப்ப போராடிக் கொண்டிருக்கின்றனர். இந்த சம்பவத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் உதவ முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
