கரூரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில், 9 குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தது மாநிலம் முழுவதும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்தில் ஆளும் திமுகவினர் மின்சாரம் துண்டித்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக தவெகவினர் குற்றம் சாட்டியிருந்தனர். இதையடுத்து, கரூருக்கு வந்த பாஜக உண்மை கண்டறியும் குழுவினரை முன்னாள் அமைச்சர் மற்றும் கரூர் எம்எல்ஏ செந்தில் பாலாஜி கடுமையாக கேள்வி எழுப்பினார்.
செய்தியாளர்களை சந்தித்த அவர், “உண்மை கண்டறியும் குழு மணிப்பூர் கலவரம், கும்பமேளா நெரிசல் விபத்து அல்லது குஜராத் பாலம் இடிந்து விழுந்த சம்பவத்துக்கு சென்றிருந்தால் ஏற்புடையதாக இருந்திருக்கும்.
ஆனால் கரூருக்கு மட்டும் வந்து உண்மையைக் கண்டறிவது எதற்காக? உள்ளபடியே விசாரணை ஆணையத்தின் அறிக்கையைப் பார்த்து நாம் செயல்படுவோம். மேலும் சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பியவர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குழுவிடம் தெரிவித்துள்ளோம்” என்றார்.
அதோடு, “மாவட்ட நிர்வாகம் மீது தவறான குற்றச்சாட்டு திணிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள். உண்மையில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த கட்சியின் மீதுதான் பொறுப்பு உள்ளது.
உண்மை கண்டறியும் குழு யார் வேண்டுமானாலும் கருத்துக்களை சேகரிக்கட்டும், ஆனால் இறுதி முடிவை எடுப்பது விசாரணை ஆணையமே. அனைவரின் கருத்துகளையும் வரவேற்கிறோம், எது சரி, எது தவறு என்பதை முடிவெடுப்பது ஆணையத்தின் பொறுப்பு” என செந்தில் பாலாஜி தெளிவுபடுத்தினார்.
