டெல்லியில் இருந்து சென்னை வந்த தவெகதேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியதாவது: “கரூர் சம்பவம் குறித்து விஜய் உட்பட அனைவரும் பேச முடியாத அளவுக்கு வேதனையில் உள்ளோம். உயிரிழந்தவர்களை எங்கள் குடும்பத்தினராகவே கருதுகிறோம். உண்மையை கண்டிப்பாக வெளிக்கொணர்வோம்.
கரூரில் துயரமாக உயிரிழந்தோருக்காக 16 நாள் துக்கம் அனுசரித்து வருகிறோம். தற்போது எங்கள் மீது பரப்பப்படும் அவதூறுகள் மற்றும் தவறான செய்திகள் குறித்து பேச தயாராக இல்லை. தவெக தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கு எதிராக பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு, கைது செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
நீதித்துறையை நம்பியவாறே நாங்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளோம். எங்கள் மீதான அவதூறுகளை போக்கி, கரூரில் நடந்த உண்மைகளை வெளிக்கொணர போராடுவோம். தவெகவை முடக்கும் நோக்கில் சிலர் செயல்பட்டு வருகின்றனர்; அதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடியுள்ளோம். மேலும் மதுரை ஐகோர்ட்டு அமர்வில், தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு விரைவில் விசாரணைக்கு வரும். இதற்கு முன், தனி நீதிபதி அவர் தாக்கல் செய்த மனுவை நிராகரித்திருந்தார்,” என அவர் தெரிவித்தார்.
