கன்னியாகுமரியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தற்போது வெளியாகி வரும் கருத்துக்கணிப்புகள் முறையானவை அல்ல என்றும், அவை பெரும்பாலும் ஒரு தரப்புக்கு ஆதரவான ‘கருத்து திணிப்பாகவே’ இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். குறிப்பாக, திமுக கூட்டணிக்கு ஆதரவாக இத்தகைய திணிப்புகள் அதிகம் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எனவே, தற்போதைய சூழலில் கருத்துக்கணிப்புகள் குறித்து விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை என அவர் தெரிவித்தார்.வரும் 4-ஆம் தேதி வெளியாகப்போகும் தேர்தல் முடிவுகளில் மக்களின் உண்மையான எண்ணம் வெளிப்படும் என்று கூறிய அவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக நடத்திய மோசமான ஆட்சிக்கான பலன் அப்போது தெரியும் என்றார்.

மேலும், நடிகர் விஜய் போட்டியிடும் தொகுதிகளில் அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் ஏதுமில்லை என்றும் நயினார் நாகேந்திரன் தனது பேட்டியின் போது திட்டவட்டமாகத் தெரிவித்தார்.