அதிமுக கட்சியின் 53 ஆம் ஆண்டு துவக்க விழா நேற்று திருத்தங்கல்லில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக கட்சியின் முன்னால் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, அதிமுக கட்சிக்கு தற்போது 52 வயது ஆகும் நிலையில் 31 வருடங்கள் ஆட்சி செய்த கட்சி என்ற பெருமையை பெற்றுள்ளது. அதிமுகவில் எப்போதும் உழைப்பவர்களுக்கு மட்டும்தான் மரியாதை.

தற்போது புதிதாக கட்சி தொடங்கியவ சுள்ளான்கள் எல்லாம் அடுத்த எம்ஜிஆர் என்று கூறுகிறார்கள். 30 மாதம் கூட அவர்கள் கட்சி தாக்கு பிடிக்காது. தமிழகத்தை பொறுத்தவரை எப்போதும் திமுக அதிமுக மட்டும் தான். பாஜக காங்கிரஸ் கூட களத்தில் போட்டியில் இல்லை. அடுத்து வரும் தேர்தலிலும் அதிமுக மற்றும் திமுகவுக்கு இடையே மட்டும்தான் போட்டி என்பது நிலவுகிறது என்றார். அதன் பிறகு திமுகவில் வாரிசு அரசியல் நிலவுவதாக விமர்சித்தார்.

அதாவது கலைஞர் கருணாநிதிக்கு பிறகு மு.க ஸ்டாலின், அவருக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின். உதயநிதிக்கு பிறகு இன்ப நிதி. இப்படி ஜனநாயகம் என்ற ஒன்று இல்லாமல் வாரிசு அரசியல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. திமுகவை பொருத்தவரை உழைப்பவர்களுக்கு மரியாதையே கிடையாது. அங்கு ஏய்ப்பவர்களுக்கு மட்டும்தான் மரியாதை. அடுத்து வரும் தேர்தலில் கண்டிப்பாக திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.

மேலும் முதல்வர் ஸ்டாலினை சீக்கிரம் வீட்டிற்கு அனுப்பி வையுங்கள். எடப்பாடி பழனிச்சாமியை கோட்டைக்கு அனுப்புங்கள் என்று கூறினார். மேலும் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்ட நிலையில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வாரிசு அரசியல் நடைபெறுவதாக திமுகவினரை விமர்சித்து வரும் நிலையில் தற்போது ராஜேந்திர பாலாஜியும் உதயநிதிக்கு பின் இன்பநதி தான் திமுகவில் என்று கூறியது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது.