சுமார் 19 ஆண்டு கால நீண்ட இழுபறிக்குப் பிறகு, இந்தியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் (EU) இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் நாளை (ஜனவரி 27) டெல்லியில் நடைபெறவுள்ள உச்சிமாநாட்டில் கையெழுத்தாகிறது. “வர்த்தக ஒப்பந்தங்களின் தாய்” என்று வர்ணிக்கப்படும் இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சொகுசு கார்கள் மீதான வரி 110 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக அதிரடியாகக் குறைக்கப்பட உள்ளது.

இதன் மூலம் பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ் மற்றும் வோக்ஸ்வாகன் போன்ற கார்களின் விலை கணிசமாகக் குறைய வாய்ப்புள்ளது. ஆரம்பகட்டத்தில் ரூ.16.3 லட்சத்திற்கு மேல் மதிப்புள்ள குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கார்களுக்கு மட்டுமே இந்த வரிச்சலுகை பொருந்தும் என்றாலும், வரும் ஆண்டுகளில் இது 10 சதவீதம் வரை மேலும் குறைக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

அதேசமயம், உள்நாட்டு உற்பத்தியாளர்களின் நலன் கருதி மின்சார வாகனங்கள் மற்றும் விவசாய இயந்திரங்களுக்கு இந்த வரிக்குறைப்பிலிருந்து தற்காலிக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றுள்ள ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தாகவுள்ள இந்த ஒப்பந்தம், இந்திய வாகனச் சந்தையில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.