உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டத்தில் கணவருடன் ஏற்பட்ட தகராறில்  கோபமடைந்த மனைவி கணவனின் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றி விட்டு, தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்டவர் சஜ்ஜன் பாசி (வயது 30), தனது மனைவி ரமாவதியுடன் சூரஜ்பூர் கிராமத்தில் வசித்து வருகிறார். நேற்று இருவருக்கும் இடையே தகராறு  ஏற்பட்ட நிலையில், இரவு நேரத்தில் உறங்கிக்கொண்டிருந்த கணவனின் மீது மனைவி எண்ணெயை ஊற்றியதாக கூறப்படுகிறது.

இதனால் உடல் வெந்து துடித்த சஜ்ஜன் பாசி முதலில் ஷிவ்கர் சுகாதார மையத்திலும் பின்னர் மாவட்ட மருத்துவமனைக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தற்போது மோசமாக உள்ளது.

சம்பவத்துக்குப் பின்னர், மனைவி ரமாவதி தலைமறைவாக இருப்பதால், போலீசார் அவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சஜ்ஜன் பாசியின் புகாரின் பேரில், ஷிப்கார் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கணவன் சஜ்ஜன் கூறுகையில், “சண்டைக்கு பின்பு சமரசமாகிப் பேசிக்கொண்டிருந்தோம். உணவு சாப்பிட்டு தூங்கிக்கொண்டிருந்த நேரத்தில்,  எண்ணெயை ஊற்றி விட்டாள். முதலில் என்ன நடக்கிறது என்று புரியவில்லை.

பிறகு நான் கத்த ஆரம்பித்தபோது, அவள் தப்பிச் சென்றுவிட்டாள். அவள் இப்படிச் செய்வாளென்று கனவில் கூட நினைக்கவில்லை” என கூறியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.