கெயிரோங் பகுதியில் நிகழ்ந்த கோரமான திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாகக் கயிலாய மானசரோவர் யாத்திரையை முடித்துவிட்டுத் திரும்பிய ஈஷா அறக்கட்டளையைச் சேர்ந்த யாத்ரீகர்கள் சிலர் மாயமானதைத் தொடர்ந்து, ஆன்மீக குரு சத்குரு கண் கலங்கிப் பேசிய வீடியோ இணையத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்திற்குக் பிரபல இந்திய பேட்மிட்டன் வீராங்கனை பி.வி. சிந்து தனது ஆழ்ந்த வருத்தத்தையும் ஆதரவையும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி நேபாள – திபெத் எல்லையில் நிகழ்ந்த பயங்கரமான திடீர் வெள்ளத்தில் சிக்கி நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். கயிலாய மலைக்குச் சென்றுவிட்டு அல்லது திரும்பி வந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் யாத்ரீகர்கள் பலரைக் காணவில்லை. மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், ஈஷா அறக்கட்டளையைச் சேர்ந்த ஒரு குழுவினர் திபெத்தில் உள்ள கெயிரோங் குடியேற்றப் பகுதியில் சிக்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாயின. வெள்ளம் தாக்கியபோது அவர்கள் குடியிருப்பு மையத்தில் இருந்ததாகவும், அந்தக் கட்டிடம் பின்னர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்பட்டது.
I don’t think I’ve ever seen Sadhguru this shaken. Watching him speak about those still missing from the Kailash Yatra is heartbreaking. We stand with you, my beloved Guruji.
The Nepal–Tibet floods are truly horrific. My deepest condolences to every family that has lost someone,… https://t.co/3oKkwNtWtY
— PV Sindhu (@Pvsindhu1) August 28, 2026
இந்தத் துயரச் சம்பவம் குறித்துப் பேசும்போது ஆன்மீக குரு சத்குரு கதறி அழுதார். யாத்ரீகர்களின் இருப்பிடம் குறித்த எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை என்று குறிப்பிட்ட அவர், மீட்புப் பணிகளுக்கு உதவுமாறு அவசரக் கோரிக்கை விடுத்தார். இந்த வீடியோவை ஷேர் செய்த பலரும் தங்களது கவலையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சத்குரு இப்படி உடைந்துபோய் அழுவதை இதுவரை தான் பார்த்ததே இல்லை என்று கூறியுள்ள பி.வி. சிந்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “கயிலாய யாத்திரையின்போது காணாமல் போனவர்களைப் பற்றி அவர் பேசுவதைப் பார்ப்பது மிகவும் மனதை உடைக்கிறது. என் அன்பிற்குரிய குருஜியே, நாங்கள் உங்களுடன் துணை நிற்கிறோம்” என்று அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், “நேபாள – திபெத் வெள்ளப்பெருக்கு மிகவும் பயங்கரமானது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் மற்றும் காணாமல் போன தங்கள் சொந்தங்களை எதிர்நோக்கியிருக்கும் குடும்பத்தினருக்காகப் பிரார்த்திக்கிறேன்” என்றார்.
இணையத்தில் பரவி வரும் வீடியோக்கள் குறித்து எச்சரித்த சிந்து, “தயவுசெய்து ஆன்லைனில் எதைப் பகிர்ந்தாலும் சற்று மனிதநேயத்துடன் இருங்கள். சில வீடியோக்களில் மக்கள் தங்களின் இறுதி தருணங்களில் இருப்பது பதிவாகியுள்ளது. அவர்கள் யாரோ ஒருவரின் தாய், தந்தை, சகோதரி, சகோதரன் அல்லது குழந்தையாக இருப்பார்கள். அவர்களின் குடும்பங்கள் சமூக வலைதளங்கள் மூலமாகத் தங்களது இழப்பைக் கண்டறியும் நிலைக்கு ஆளாகக் கூடாது” என்று வேண்டுகோள் விடுத்தார்.
மேலும், “பார்வைகளையும் ஃபார்வர்டுகளையும் விட மனிதத்தின் மாண்பு முக்கியம். இந்தத் துயரம் என்னை ஆழமாகப் பாதித்துள்ளது. என் பெற்றோரும்கூட இந்த யாத்திரைக்குச் செல்லவிருந்து கடைசி நேரத்தில் ரத்து செய்தனர். வாழ்க்கை ஒரு கணத்தில் மாறிவிடக்கூடியது. உங்கள் அன்புக்குரியவர்களை அரவணைத்து வாழுங்கள்” என்று சிந்து தனது பதிவில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
