மகாராஷ்டிர மாநிலம் சந்திராப்பூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற தடோபா-அந்தாரி புலி காப்பகத்தில், ‘மாமா’ (Mama Male) என்று செல்லமாக அழைக்கப்படும் பிரம்மாண்ட ஆண் புலி ஒன்று செய்துள்ள வேட்டை, தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

தடோபா காப்பகத்தின் எல்லைப் பகுதியான ஃபுல்ஜாரி கிராமத்திற்கு அருகே பதுங்கியிருந்த இந்த ‘மாமா’ புலி, அங்கு மேய்ந்து கொண்டிருந்த பசு ஒன்றை மின்னல் வேகத்தில் தாக்கி, அடுத்த சில நொடிகளிலேயே அதைக் கொன்று காட்டை நோக்கி இழுத்துச் சென்றது.

ஊருக்கு மிக அருகிலேயே இந்தத் திகில் சம்பவம் நடந்துள்ளதால் கிராம மக்கள் கடும் பீதியில் உள்ளனர். ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் ஒரு பசுவை நடுரோட்டிலேயே வேட்டையாடிய இந்த ‘மாமா’ புலி, தற்போது மீண்டும் ஊருக்குள் புகுந்து வேட்டையாடி இருப்பது வனத்துறையினருக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.

ஒரு காலத்தில் தன் சகோதரியால் வளர்க்கப்பட்டதாலும், சக ஆண் புலியுடன் இணக்கமாக இருந்ததாலும் ‘மாமா’ என்று பெயரிடப்பட்ட இந்தப் புலி, தற்போது வேட்டையில் காட்டும் ஆக்ரோஷம் சுற்றுலாப் பயணிகளிடையே வியப்பையும், உள்ளூர் மக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.