சினிமா மோகம் வகுப்பறைகளையும் விட்டு வைக்கவில்லை என்பதற்குச் சான்றாக, தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘துரந்தர்’ (Dhurandhar) திரைப்படத்தின் கதாபாத்திரங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கணக்குப் பதிவியல் தேர்வுத்தாள் ஒன்று சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. அதாவது இயக்குநர் ஆதித்ய தார் இயக்கத்தில் உருவான ‘துரந்தர்’ திரைப்படம் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஒரு தனியார் பயிற்சி மையம் தனது கணக்குப் பதிவியல் தேர்வுத்தாளை முழுவதுமாக அந்தப் படத்தின் கதாபாத்திரங்களை மையமாக வைத்து வடிவமைத்துள்ளது.

சமூக வலைதளப் பயனர் ஒருவர் பகிர்ந்துள்ள இந்தத் தேர்வுத்தாளில், படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களான ஜமீல் ஜமாலி, எஸ்.பி. சௌத்ரி அஸ்லம் மற்றும் யலினா ஜமாலி ஆகியோர் ஒரு நிறுவனத்தின் கூட்டாளிகளாகக் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.

தேர்வுத்தாளில் கேட்கப்பட்டுள்ள சில கேள்விகள் பின்வருமாறு, “ஜமீல் ஜமாலி, எஸ்.பி. சௌத்ரி மற்றும் யலினா ஜமாலி ஆகியோர் லாப நட்டங்களைச் சமமாகப் பகிர்ந்து கொள்கின்றனர். இதில் எஸ்.பி. சௌத்ரி ஓய்வு பெற்றால், புதிய லாபப் பகிர்வு விகிதம் என்ன?” மற்றொரு கேள்வியில், “ஹம்சா அலி மசாரி, ரஹ்மான் டகாய்ட் மற்றும் உசைர் பலோச் ஆகியோர் கூட்டாளிகள். இதில் ரஹ்மான் டிசம்பர் 5, 2025 அன்று இறந்துவிடுகிறார்…” என்று படத்தின் கதையோட்டத்திற்கு ஏற்ப ‘பேலன்ஸ் ஷீட்’ (Balance Sheet) கணக்குகள் கேட்கப்பட்டுள்ளன.

இந்தத் தேர்வுத்தாள் வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் கணக்குப் பதிவியல் வார்த்தைகளையும் சினிமா வசனங்களையும் கலந்து கிண்டல் செய்து வருகின்றனர். “கடைசியில் ஹம்சா மட்டுமே உரிமையாளராகத் தப்பிப்பார், மற்ற இருவரையும் அவர் ‘நிரந்தரமாக’ ஓய்வு பெறச் செய்துவிடுவார்” என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.

“கூட்டு நிறுவனம் அல்ல… இது மாஃபியா கூட்டணி!” என்றும், “காப்பீடுத் தொகை என்பது கேங் வார் நஷ்டத்தை ஈடுகட்டுவது போல இருக்கிறது” என்றும் நகைச்சுவையான கமெண்ட்கள் குவிந்து வருகின்றன. மேலும் சலிப்பை ஏற்படுத்தும் ஒரு பாடத்தை, மாணவர்களுக்குப் பிடித்தமான பாப்-கலாச்சாரத்தோடு (Pop Culture) இணைத்து வழங்க ஆசிரியர் முயற்சி செய்துள்ள விதம் பலராலும் பாராட்டப்பட்டாலும், இது ஒரு வினோதமான போக்காகவே பார்க்கப்படுகிறது.