ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த கோர விபத்தில், அதிவேகமாகச் சென்ற இருசக்கர வாகனம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதியதில் தாயும் மகனும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் காண்போரை நிலைகுலையச் செய்துள்ளன.

அதாவது விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த நரேந்திர குமார் (32) என்பவர், தனது தாய் நாகமணி (59) என்பவரைப் பின்னால் அமர வைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் (NH-16) சென்று கொண்டிருந்தார். அவரது பைக் அரிணம் அக்கிவலசா பகுதியில் பைக் அதிவேகமாகச் சென்றுள்ளது.

அப்போது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியை நரேந்திர குமார் கவனிக்கவில்லை எனத் தெரிகிறது. மிக அதிக வேகத்தில் சென்ற பைக், கட்டுப்பாட்டை இழந்து லாரியின் பின்புறத்தில் பயங்கரமாக மோதியது. மோதலின் தாக்கம் எவ்வளவு கடுமையாக இருந்தது என்பதை சிசிடிவி காட்சிகள் உறுதிப்படுத்துகின்றன. மோதிய வேகத்தில் தாயும் மகனும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். தலையில் பலத்த காயம் அடைந்த இருவரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், சடலங்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், இருசக்கர வாகனத்தின் அதிவேகமே இந்த விபத்திற்குக் காரணம் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், “வாகன ஓட்டிகள் நெடுஞ்சாலைகளில் அனுமதிக்கப்பட்ட வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும். சிறிய கவனக்குறைவும் ஈடு செய்ய முடியாத உயிரிழப்புகளை ஏற்படுத்திவிடும்” என எச்சரித்துள்ளனர்.