கர்நாடக மாநிலம் கலபுரகி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் தனது மனைவியின் கழுத்தை அறுத்து, அவர் மீது காரை ஏற்றிக் கொடூரமாகக் கொலை செய்த கணவர் மற்றும் அவரது பெற்றோரை போலீசார் கைது செய்துள்ளனர். அதாவது கலபுரகி மாவட்டம், பாலுராகி கிராமத்தைச் சேர்ந்தவர் அக்ஷய். இவருக்கும் ஷைலா (28) என்ற பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், ஷைலாவிற்கு வேறொரு நபருடன் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனை அக்ஷய் பலமுறை கண்டித்தும், ஷைலா தனது போக்கை மாற்றிக்கொள்ளவில்லை எனத் தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அக்ஷய், தனது மனைவி மற்றும் பெற்றோரை காரில் அழைத்துச் சென்றுள்ளார். கங்காபுரா அருகே ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் காரை நிறுத்திய அக்ஷய், திடீரென ஷைலாவை வெளியே இழுத்து அரிவாளால் அவரது கழுத்தை அறுத்துள்ளார். ரத்த வெள்ளத்தில் துடித்த ஷைலா, கணவரிடமிருந்து தப்பித்து அருகில் இருந்த வயல்வெளிக்குள் ஓடியுள்ளார். விடாமல் துரத்திய அக்ஷய், தனது காரை எடுத்துக்கொண்டு வயலுக்குள் புகுந்து ஷைலா மீது மோதியுள்ளார். இதில் கீழே விழுந்த ஷைலா மீது காரை ஏற்றி உடல் நசுங்கச் செய்து கொடூரமாகக் கொலை செய்தார்.
இந்தக் கொடூரச் சம்பவத்தை அங்கிருந்தவர்கள் தங்களது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கிருந்த சிலர் கற்கள் மற்றும் கட்டைகளை வீசி அக்ஷயைத் தடுக்க முயன்றபோதிலும், அவர் வெறித்தனமாக மனைவியைக் கொலை செய்வதிலேயே குறியாக இருந்துள்ளார்.
மேலும் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், ஷைலாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொலைச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக முயன்ற அக்ஷய் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது பெற்றோர் என மொத்தம் 3 பேரைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
