அரசுப் பள்ளிகளில் மாணவர்களைத் தொந்தரவு செய்யும் தவெக நிர்வாகிகளை உடனடியாகக் கட்சியிலிருந்து நீக்குவோம் என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அரசுப் பொறுப்பில் இல்லாத சில தவெக நிர்வாகிகள், அரசுப் பள்ளிகளுக்குள் நுழைந்து முதலமைச்சர் விஜய்யின் புகைப்படங்களை வைப்பது மற்றும் பள்ளி மாணவர்களை ‘தவெக’ என்று கூறச் சொல்லி வற்புறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக எழுந்த புகார்கள் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகின.

இதுதொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், மாணவர்களின் கல்விச் சூழலைக் கெடுக்கும் வகையிலும், அவர்களுக்குத் தொந்தரவு தரும் வகையிலும் செயல்படும் கட்சி நிர்வாகிகள் மீது தவெக தலைமை உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அவர்களைக் கட்சியிலிருந்து நீக்கும் என்றும், இந்த எச்சரிக்கையையும் மீறி யாரேனும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மிகக் கடுமையாக்கப்படும் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.