தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராகப் புதிய அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நடிகர் விஜய்-க்கு, பிரபல இயக்குநரும் நடிகருமான அமீர் வழங்கியுள்ள பகிரங்க அறிவுரை தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினிகாந்தின் அரசியல் வருகையையும் தொடக்கத்திலிருந்தே எதிர்த்து வந்த அமீர், தற்போது விஜய்யின் அரசியல் நகர்வுகளையும் கடுமையாக விமர்சித்துள்ளார். “அன்று ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தபோது அவரை எதிர்த்தேன், பின்னர் அவர் தனது தவறை உணர்ந்து விலகி மீண்டும் நடிக்கச் சென்றார்;
அதேபோல் விஜய்யும் அரசியல் குறித்த அடிப்படைப் புரிதல் ஏதுமின்றி கட்சி ஆரம்பித்துள்ளார், அவர் இப்போதே கட்சியை கலைத்துவிட்டுச் சென்றால் அவருக்கு நல்லது” என அமீர் அதிரடியாகப் பேசியுள்ளார்.
சினிமாவில் இருந்துவிட்டு திடீரென வந்து நாட்டைத் திருத்தப்போகிறேன் என்று கூறுவதில் என்ன நியாயம் இருக்கிறது என கேள்வி எழுப்பியுள்ள அமீர், பல தலைவர்கள் மாணவர் பருவம் முதலே அரசியலில் ஊறி வந்தவர்கள் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெறும் பணத்தைச் சம்பாதித்துவிட்டு அதன் மூலம் சேவை செய்ய வருகிறேன் என்று சொல்வதெல்லாம் சரியான அரசியல் புரிதல் அல்ல என்றும் அவர் சாடியுள்ளார். தவெக வேட்பாளர்கள் சிலருக்குத் தேர்தல் தேதிகூடத் தெரியவில்லை எனச் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், அமீரின் இந்த “யாரை நம்பி வந்தீர்கள்?” என்கிற ரீதியிலான அட்வைஸ் விஜய் ரசிகர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய்யின் அரசியல் எதிர்காலம் குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், அமீரின் இந்தக் கருத்து எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியது போல அமைந்துள்ளது.
