தமிழக அரசியல் களம் தேர்தல் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், கரூரில் தமிழக வெற்றி கழகத்திற்கு (தவெக) பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அக்கட்சியின் கரூர் மாநகரச் செயலாளர் பவுன்ராஜ், தனது ஆதரவாளர்களுடன் இன்று அதிமுக-வில் இணைந்தார்.

அதாவது சமீபத்தில் கரூரில் நடைபெற்ற ‘துயர வழக்கில்’ கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த தவெக நிர்வாகி பவுன்ராஜ், வரவிருக்கும் தேர்தலில் போட்டியிட அக்கட்சியின் தலைமையிடம் விருப்பம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அவருக்கு போட்டியிட வாய்ப்பு (சீட்) மறுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதனால் அதிருப்தியில் இருந்த அவர், தவெக-விலிருந்து விலக முடிவெடுத்தார்.

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில், பவுன்ராஜ் தனது நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களுடன் அதிமுக-வில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் தலைமையையும், கொள்கைகளையும் ஏற்று இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

கட்சி தொடங்கி தீவிரமாகச் செயல்பட்டு வரும் வேளையில், மாநகரச் செயலாளர் போன்ற முக்கியப் பொறுப்பில் இருந்தவர் விலகி அதிமுக-வில் இணைந்திருப்பது விஜய் தரப்பிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட அளவில் முக்கிய நிர்வாகிகளின் இடமாற்றம் கட்சியின் அடிமட்டத் தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பவுன்ராஜ், கட்சிக்காக உழைத்தவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படாததால் இந்த முடிவை எடுத்துள்ளேன். எடப்பாடியார் அவர்களின் ஆளுமையும், அதிமுக-வின் மக்கள் நலத்திட்டங்களும் என்னை ஈர்த்துள்ளன என்றார். மேலும் தேர்தல் நெருங்கும் வேளையில் தவெக நிர்வாகிகள் மற்ற கட்சிகளுக்குத் தாவுவது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.