மேற்கு வங்காளத்தின் கிழக்கு புர்துவான் பகுதியில், இளம் பெண் ஒருவரின் உடல் கழுத்து பகுதியில் அறுபட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் பிரியங்கா 22, என்பது தெரிய வந்தது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் தடயங்கள் சேகரிக்க தொடங்கியுள்ளனர்.

மேலும் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோரிடம் நடத்திய விசாரணையில், அந்தப் பெண் பெங்களூரில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலில் வேலை செய்து வந்ததாகவும், ஆகஸ்ட் 12 அன்று விடுமுறையில் வீட்டுக்கு வந்த போது, அவசர அழைப்பு வந்ததால் புதன்கிழமை அன்று வீட்டை விட்டு வெளியே சென்ற நாளிலிருந்து அவர் வீடு திரும்பவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.

 

 

அந்தப் பெண் யாருடன் கடைசியாக பேசினார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது உடல் கழுத்தறுப்பட்டு இருந்ததால் இது தற்கொலையா கொலையா என்ற கோணத்தில் விசாரணையை அதிகாரிகள் தொடங்கிய நிலையில், பிரியங்காவின் பெற்றோர் இது கொலை தான் என்றும், இது தொடர்பாக போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வேண்டுகோள் விடுத்துள்ளனர்.