தமிழகத்தில் திமுகவை எதிர்கொள்ள வலுவான கூட்டணி அமைக்க வேண்டும் என மத்திய பாஜக தலைமை வலியுறுத்தி வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிடிவாத நிலைப்பாடு கூட்டணி முயற்சிகளுக்கு சவாலாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, அதிமுகவிலிருந்து பிரிந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி. தினகரனை குறைந்தபட்சம் கூட்டணியிலாவது சேர்க்க வேண்டும் என்ற பாஜக தலைமை கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து நிராகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பாஜக மற்றும் அதிமுக இடையே கடந்த ஏப்ரல் 2025-ல் மீண்டும் கூட்டணி உறுதி செய்யப்பட்டது. இந்த கூட்டணியை அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) நடத்தும் என அறிவிக்கப்பட்டது. இதனை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினார். ஆனால், கூட்டணி அறிவிக்கப்பட்டு எட்டு மாதங்கள் கடந்தும், இந்த அணியில் புதிய கட்சிகள் எதுவும் இணையாத நிலை நீடித்து வருகிறது.
இந்த நிலையில், கடந்த டிசம்பர் 23-ஆம் தேதி, பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல், எடப்பாடி பழனிசாமியை சந்தித்து முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் தொகுதிப் பங்கீடு தொடர்பான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. கடந்த தேர்தலைவிட இந்த முறை பாஜக அதிக தொகுதிகளை கோரியதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, பாமக, தேமுதிக, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி. தினகரன் ஆகியோரை மீண்டும் என்டிஏவில் சேர்ப்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
ஆனால், அதிமுக வியூக வகுப்பாளர்கள் முன்கூட்டியே வெளியிட்டதாக கூறப்படும் சீட் பட்டியல் காரணமாக, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி. தினகரன் மற்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா ஆகியோர் அதிமுக மீது அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால், அவர்கள் மாற்றுக் கூட்டணிகளை தேடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிற மாநிலங்களில் பாஜக வலுவான கூட்டணிகளை அமைத்து ஆட்சியைக் கைப்பற்றி வரும் நிலையில், தமிழகத்தில் மட்டும் ஏன் அதுபோன்ற கூட்டணி உருவாகவில்லை என்ற கேள்வியை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி எழுப்பியதாக கூறப்படுகிறது. இதன் மூலம் தமிழக அரசியல் நிலவரம் குறித்து அவர் தனது வருத்தத்தையும் வெளிப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் பாஜக, தேமுதிக, பாமக, மதிமுக ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட்டு 18 சதவீத வாக்குகளைப் பெற்று 2 இடங்களில் வெற்றி பெற்றன. அந்த கூட்டணியை தக்க வைத்திருந்திருந்தால், 2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக–அதிமுகவுக்கு வலுவான சவால் அளித்திருக்க முடியும் என்றும், அந்த வாய்ப்பை பாஜக தவறவிட்டதாகவும் கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர்.
மேலும், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முழு பதவிக்காலம் அதிமுக ஆட்சி தொடர மத்திய பாஜக அரசின் ஆதரவு முக்கிய காரணமாக இருந்தது. ஆனால், அதன் அரசியல் பலன் பாஜகவுக்கு கிடைக்கவில்லை என்றும் விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. 2021 சட்டமன்றத் தேர்தலில் அமித் ஷா வலியுறுத்தியபடி, அமமுக (டிடிவி. தினகரன்) மற்றும் தேமுதிகவை கூட்டணியில் சேர்த்திருந்தால், திமுகவின் தனிப்பெரும்பான்மையையாவது தடுத்திருக்க முடியும் என்றும், எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதமே அதற்கு தடையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையிலேயே தற்போது மீண்டும் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி. தினகரனை கூட்டணியில் சேர்க்க வேண்டும் என அமித் ஷா வலியுறுத்தியும், அதனை எடப்பாடி பழனிசாமி ஏற்க மறுப்பதால், திமுகவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதுவே பிரதமர் மோடிக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
